மக்கள் விடுதலை முன்னணி மற்றும் சிவில் அமைப்புக்களின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியுமானால் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய

முன்னணியின் ஜனாதிபதி வேட்பாரளர் நியமனத்தை சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு வழங்க தயார் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தனது பிரதிநிதியின் ஊடாக கரு ஜயசூரியவுக்கு அறிவித்துள்ளார்.

பிரதமருக்கு மிக நெருக்கமானவரான திணேஷ் வீரக்கொடியே இவ்வாறு இந்தச் செய்தியை சபாநாயகர் கரு ஜயசூரியவைச் சந்தித்து  தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் நிபந்தனை ஒன்றையும் முன்வைத்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதானால் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகி பொது வேட்பாளராகவே போட்டியிட வேண்டும் என்பதே அந்த நிபந்தனையாகும். இந்த நிபந்தனைக்கு இணங்கியுள்ள கரு ஜயசூரிய,  திணேஷ் வீரக்கொடி முன்னிலையிலேயே  ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்காவுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு உடனடியாக அவரைச் சந்திக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளதாகவும், இந்நாட்களில் கொழும்புக்கு வெளியில் இருப்பதாக ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்கா தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜே.வி.பியின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை

அந்த தொலைபேசி அழைப்பின் உண்மைத் தன்மையினை அறிந்து கொள்வதற்காக அநுர குமார திசாநாயக்காவை தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்கு நாம் எடுத்த முயற்சிகள் பயனளிக்கவில்லை.  எவ்வாறாயினும் அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரிடம் இது  தொடர்பில் கேட்டபோது, சபாநாயகர் கரு ஜயசூரிய பல தடவைகள் தமது கட்சியின் தலைவருக்கு தொலை பேசி அழைப்பை மேற்கொண்டிருந்ததாகவும், எனினும் அதனைவிட மேலதிகமாக எதுவும் தனக்குத் தெரியாது என்றும் தெரிவித்தார்.


பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் கரு ஜயசூரியவிடம் முன்வைத்துள்ள யோசனை தொடர்பில் நாம் கேட்ட போது, ஐக்கிய தேசிய கட்சியுடன் எந்த வகையிலான தொடர்புகளுக்கு ஜே.வி.பி தயாராக இல்லை என அந்த சிரேஷ்ட உறுப்பினர் உறுதியாகவே தெரிவித்தார்.

ஜாதிக ஜனபலவேக ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார திசாநாயக்கா இம்முறை கண்டிப்பாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என்றும்  இது தொடர்பில் எந்த சந்தேகங்களையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பிந்திய செய்தி