இரகசியமான முறையில் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்றைக் காட்டி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுசில் பிரேமஜயந்தை அமைச்சுப் பதவியிலிருந்து

நீக்குவதற்கு “ப்ளேக் மெயில்” பண்ணிய சம்பவத்தை ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் முக்கிய கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சஜின்வாஸ் குணவர்தன இன்று புதன்கிழமை வெளிப்படுத்தினார். இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்விடயத்தை அம்பலப்படுத்தினார்.

தனது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கும் ராஜபக்ஷக்களினால் விடுக்கப்பட்டுள்ள மரண அச்சுறுத்தலை வெளிப்படுத்தி நேற்று செவ்வாய்க்கிழமை காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  ஊடக சந்திப்பின் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன  குரல் பதிவொன்றையும் பகிரங்கப்படுத்தினார். இவ்விடயம் தொடர்பில் நேற்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த, சஜின்வாஸ் குணவர்தன நீதிமன்றத்தினால் கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாக்கப்பட்டவர் எனத் தெரிவித்திருந்தார்.

சஜின்வாஸ் வெளிப்படுத்திய குரல் பதிவானது, நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் ஊடகப் பிரிவினால் உருவாக்கப்பட்டது எனத் தெரிவித்த சுசில் பிரேமஜயந்த, சஜின் வாஸை அவமரியாதைக்கும் உட்படுத்தியிருந்தாா்.

இதனைத் தொடர்ந்து சுசில் பிரேமஜயந்தின் இரகசியத்தை வெளிப்படுத்துவதற்காக இன்று விஷேட ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்த சஜின் வாஸ், ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவம் தொடர்பில் குறித்த இரகசியத்தை இவ்வாறு அம்பலப்படுத்தினார்.

“உங்களைப் போன்ற ஸ்ரீ.ல.சு.கட்சியின் மூத்த உறுப்பினர்கள் இவ்வாறான கருத்துக்களைத் தெரிவிப்பதையிட்டு நான் வேதனையடைகின்றேன். நீங்கள் இந்தளவுக்கு வக்காளத்து வாங்க வேண்டாம். காரணம் நீங்கள் மிகச் சிறந்த மூத்த உறுப்பினராகும்.

உங்களுக்கு நினைவிருக்கின்றதா நீங்கள் பெற்றோலிய வள அமைச்சராக இருந்த போது நீங்கள் சிறந்த வேலை ஒன்றைச் செய்தீர்கள். எனினும் திடீரென உங்களைச் சந்திப்பதற்காக அவசரமான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த என்னை உங்களிடம் அனுப்பினார். முன்னாள் ஜனாதிபதி என் மூலம் அனுப்பிய செய்தி என்ன என்பதை கொஞ்சம் இதனை நினைத்து பாருங்கள். உங்களை அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்யுமாறு கோரியிருந்தாா். நான் ஏன் விலக வேண்டும் என நீங்கள் கேட்டீர்கள். அப்போது முன்னாள் ஜனாதிபதியிடத்தில் ஒரு வீடியோ பதிவு இருந்தது. அந்த வீடியோவில் என்ன இருந்தது என்று எனக்குத் தெரியும். உங்களுக்குத் தெரியும். அது உங்கள் குடும்பத்துடன் தொடர்புடைய ஒருவரது வீடியோ. அதனை இங்கு நான் பகிரங்கப்படுத்தப் போவதில்லை. எனினும் அந்த வீடியோவை உங்களிடம் காட்டியதுடன் நீங்கள் மயக்கம் போட்டு விழப் போனீர்கள். அதன் பின்னர் நீங்கள் அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்தீர்கள். அதன் பின்னர் அந்த அமைச்சு தினேஷ் குணவர்தனவுக்கு வழங்கப்பட்டது

இந்த வரலாற்றை மறந்து விட வேண்டாம். இதுதான் ராஜபக்ஷக்களின் வரலாறு. அன்று உங்களை அச்சுறுத்தி, ப்ளேக் மெயில் செய்து உங்களுக்கு அந்த வீடியோவைக் காட்டி பதவியை விட்டு தூக்கினார்கள். இதுதான் ராஜபக்ஷக்களின் நடைமுறைகள்” என்றும் சஜின் வாஸ் இந்த ஊடகவியாளர் சந்திப்பின் போது மேலும் தெரிவித்தார்.

பிந்திய செய்தி