வரும் வாரம் அமெரிக்கர்களுக்கு மிகவும் கடினமான மற்றும் சோகமான வாரமாக அமையும் என்று அந்நாட்டின் பொது சுகாதார சேவைப்பிரிவின் தலைவர் ஜெரொமி ஆடம்ஸ் எச்சரித்துள்ளார்.

“இது அமெரிக்கர்களுக்கு பெர்ல் ஹார்பர் அல்லது 9/11 தாக்குதல் போன்ற சூழலை உருவாக்கும். தற்போது அது ஏதோ ஒரு பகுதியில் அல்லாது ஒட்டுமொத்த நாடும் பாதிக்கப்பட உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் 8,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

பிரிட்டனில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

பிரிட்டனில் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,934ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 600க்கும் மேற்பட்டோர் அங்கு உயிரிழந்துள்ளனர்.

பிரிட்டனில் 47,806 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டனில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

சிங்கப்பூரில் ஒரே நாளில் 120 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 120 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதில் இருந்து, சிங்கப்பூரில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச நோய்த்தொற்று எண்ணிக்கை இதுவே ஆகும்.

சீனாவுக்கு வெளியே பிப்ரவரி மாதத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவியதை உறுதிசெய்த முதல் நாடு சிங்கப்பூர் ஆகும். ஆனால், கடுமையான நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அதிகளவிலான பரிசோதனைகள் உள்ளிட்டவற்றின் காரணமாக நோய்த்தொற்று பரவலை சிங்கப்பூர் கட்டுக்குள் கொண்டுவந்தது.

ஆனால், மார்ச் மாதம் வைரஸ் பரவலின் இரண்டாவது கட்டத்தில் ஆசிய நாடுகள் பெரிதும் பாதிக்கப்படலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது. அப்போது வெளிநாடுகளிலிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பியவர்கள் நோய்த்தொற்று பரவுவதற்கு காரணமாக இருந்தனர்.

அதிகளவிலான வெளிநாட்டு தொழிலாளர்கள் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இரண்டு மிகப் பெரிய முகாம்களில் 20,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இன்று கோவிட்-19 பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள 120 பேரில் 116 பேருக்கு சமூக பரவலின் காரணமாக நோய்த்தொற்று ஏற்பட்டது எனவும் இனி வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்படும் எனவும் சிங்கப்பூர் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் உள்ள மூன்று லட்சம் வெளிநாட்டு பணியாளர்களில் பெரும்பாலானோர் கட்டுமானத்துறையில் பணிபுரிகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: 571ஆக உயர்வு

தமிழகத்தில் ஒரே நாளில் இன்று (மார்ச் 5) 86 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளதால், மாநிலத்தில் தற்போது கொரோனா தாக்கத்திற்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 571ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள 86 பேரில் 85 நபர்கள் டெல்லியில் நடைபெற்ற மத நிகழ்வில் பங்குபெற்றவர்கள் என்றும் ஒருவர் துபாயில் இருந்து தமிழகம் திரும்பியவர் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மூன்றாம் நிலைக்குச் செல்லக்கூடாது என மக்கள் ஒவ்வொருவரும் நினைக்கவேண்டும் என்றார்.

''தமிழகம் முழுவதும் 90,824 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். 127 பேர் அரசு கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை எட்டு நபர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 4,612 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது” என்றார் பீலா ராஜேஷ்.

கடந்த ஆறு தினங்களில் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கையை பார்க்கும்போது, ஒவ்வொரு நாளும் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 50க்கும் மேற்பட்டதாக உள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் டெல்லி மதநிகழ்வில் கலந்துகொண்டவர்கள் அல்லது அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் இரானில் “ஆபத்து குறைந்த” வணிக நடவடிக்கைகள் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என அந்நாட்டு அதிபர் ஹசன் ரூஹானி கூறியுள்ளார்.

ஆனால் எந்தெந்த நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என்று அவர் தெளிவாக கூறவில்லை.

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள், மத வழிப்பாட்டுதலங்கள் ஆகியவைதொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்று குறிப்பிட்ட அவர், ஏப்ரல் 18ஆம் வரை நகரங்களுக்கு இடையே பயணிப்பதும் தடை விதிக்கப்பட்டிருக்கும் என தெரிவித்தார்.

இரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,603ஆக உயர்ந்திருக்கிறது. 58,226 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

முதன்முதலில் அதிகமான மக்களுக்கு கொரோனா தொற்று பரவிய ஒருசில நாடுகளில் இரானும் ஒன்று. உண்மையில் அங்கு உயிரிழந்திருப்பவர்களின் எண்ணிக்கை, அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை விட அதிகளவில் இருக்கும் என்று வல்லுநர்கள் நம்புகின்றனர்.

மீண்டெழுமா ஸ்பெயின்? - என்ன சொல்கிறார் பிரதமர்?

ஸ்பெயினில் ஒரே நாளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மூன்றாவது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) குறைந்துள்ளது.

தினமும் அதிகளவிலான உயிரிழப்புகளை ஸ்பெயின் சந்தித்து வந்தது. தற்போது அது குறைந்திருக்கிறது.

ஸ்பெயினில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், இத்தாலியில் கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று குறைந்துள்ளது. இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் உச்சத்தை எட்டி தற்போது குறையத் தொடங்கியதை போன்றுள்ளது.

கடந்த 10 நாட்களில் ஸ்பெயினில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் இன்றைய எண்ணிக்கையே குறைவானதாகும். மார்ச் 26ஆம் தேதிக்கு பின் இப்போதுதான் முதன்முறையாக ஒரே நாளில் 700க்கும் குறைவானோர் இறந்துள்ளனர். ஆனால், இந்த போராட்டம் முடிவடைவதிலிருந்து ஸ்பெயின் வெகு தொலைவில் உள்ளதாகவே கருதப்படுகிறது.

ஸ்பெயின் நாட்டு செய்தித்தாளான எல் பாரிஸின் நடுப்பக்கத்தில் எழுதியுள்ள ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்சேஸ், “ஐரோப்பிய நாடுகள் தங்கள் பழைய கொள்கைகளை அழிக்கும் நேரம் வந்துவிட்டது. நாம் புதிய சகாப்தத்திற்குள் நுழைந்து விட்டோம். அதனால் புதிய நடவடிக்கைகளையே எடுக்க வேண்டும். நம்மிடம் இருக்கும் நேர்மறை கொள்கைகளை வைத்துக்கொண்டு மற்றதை மீண்டும் புதிதாக உருவாக்குவோம்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

“நாம் செயல்பட இதுவே சரியான தருணம். முழு ஐரோப்பாவும் தற்போது ஆபத்தில் உள்ளது.”

"இந்தியாவின் 274 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு"

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,374ஆக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார். சற்று முன்னர் டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், இந்தியாவில் கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் இதுவரை 267 பேர் குணமடைந்துள்ளதாகவும், அதே சமயத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

“இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சராசரியாக 4.1 நாட்களுக்கு ஒருமுறை இரட்டிப்பு ஆகிறது, இதுவே தப்லிக் ஜமாஅத் நிகழ்வு நடைபெறாமல் இருந்திருந்தால், இது 7.4 நாட்களாக இருந்திருக்கும். நாடு முழுவதும் உள்ள 274 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

இவரை தொடர்ந்து பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் மற்றொரு இணை செயலரான புன்யா சலிலா , “இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் 27,661 நிவாரண முகாம்கள் மற்றும் தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இவற்றில் மொத்தம் 12.5 லட்சம் பேர் தங்கியுள்ளார்கள். இதுமட்டுமின்றி, அரசு, தனியார் பங்களிப்பில் நாடு முழுவதும் 19,460 உணவு வழங்குமிடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் வாயிலாக 75 லட்சம் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

“13.6 லட்சம் தொழிலாளர்களுக்கு அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையால் தங்குமிடம் மற்றும் உணவு வழங்கப்படுகிறது.”

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஆலோசனை

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக நாட்டின் இரண்டு முன்னாள் குடியரசுத் தலைவர்கள், இரண்டு முன்னாள் பிரதமர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி ஆலோசனை நடத்தியதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கடந்த சில நாட்களாக துறைசார் அதிகாரிகள், சிறப்பு குழுக்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோருடன் பேசி வருகிறார்.

இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர்களான பிரணாப் முகர்ஜி, பிரதீபா பாட்டீல் மற்றும் முன்னாள் பிரதமர்களான மன்மோகன் சிங், தேவகவுடா உள்ளிட்டோரை அழைத்து, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் ஆலோசனை நடத்தியாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

விரைவில் மீளுமா இத்தாலி?

உலகிலேயே இத்தாலியில்தான் கொரோனாவால் அதிகம் பேர் இறந்துள்ளனர். 15,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த இத்தாலியில் தற்போது சற்று நம்பிக்கை தரும் வகையான செய்திகள் வெளியாகின்றன.

தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை முதன்முறையாக குறைந்துள்ளது. தினமும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கடந்த 8 நாட்களாக தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலியில் 1,24,632 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில வாரங்களாக உயிரிழப்புகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட, தற்போது அது குறைந்து வருகிறது.

கொரோனா தொற்றால் அதிகபட்ச உயிரிழப்புகள் ஏற்படும் கட்டத்தை கிட்டத்தட்ட தாண்டும் நிலையில் இருப்பதாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்சேஸ் தெரிவித்துள்ளார்.

வைரஸ் தொற்றால் ஒருநாள் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளதை தொடர்ந்து பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

எனினும், அந்நாட்டில் ஏப்ரல் 26ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் இதுவரை 1,26,168 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 11,947 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஸ்பெயினில் குறையத் தொடங்கிய கொரோனா தாக்கம்

இந்தியாவில் சிக்கியுள்ள பிரிட்டன் மக்கள் நாடு திரும்ப சிறப்பு விமானம்

இந்தியாவில் சிக்கியுள்ள பிரிட்டன் குடிமக்களை மீட்க 7 தனி விமானங்களை அந்நாடு ஏற்பாடு செய்துள்ளது.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் பிரிட்டன் நாட்டை சேர்ந்த 35,000 பேர் நாடு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர். அதில் சுமார் 20,000 பேர் பிரிட்டன் உயர் ஆணையத்தை தொடர்பு கொண்டுள்ளனர்.

கடுமையான காலத்திற்கு தயாராகுங்கள் - எச்சரித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்

கடுமையான வாரத்திற்குத் தயாராகுங்கள் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கனவே இந்த வாரம் கொரோனா வைரஸினால் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் நேரலாம் என வெள்ளை மாளிகை கணித்திருந்தது.

முன்பே கூறியது போல உயிரிழப்புகள் ஏற்படும் என எச்சரித்த அதிபர் டிரம்ப், ஈஸ்டர் தினத்தன்று அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய சமூக இடைவெளி குறித்தும் அறிவுரை வழங்கினார்.

தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 60 வயது நபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முன்னதாக ராமநாதபுரத்தை சேர்ந்த 71 வயதான ஆண் ஒருவர் கடந்த மார்ச் 2ம் தேதி இறந்தார். இவர் கொரோனா தொற்றால் இறந்தார் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த இரண்டு நபர்களின் இறப்பால் தமிழகத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 485ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக டெல்லியில் நடந்த மத நிகழ்வு ஒன்றில் பங்குபெற்ற நபர்கள் பலருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் உலகளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60,000-ஐ தாண்டியது.

கொரோனா குறித்து நேற்று வரை நடந்த நிகழ்வுகளை படிக்ககொரோ

பிரிட்டனில் ஒன்பது நாட்களில் ஏற்படுத்தப்பட்ட மருத்துவமனை

கொரோனா வைரஸ் தொற்றுக்குச் சிகிச்சை அளிக்க ஒன்பதே நாட்களில் ஒரு மருத்துவமனையை ஏற்படுத்தி இருக்கிறது பிரிட்டன்.

சீனா கட்டிய மருத்துவமனை போல அல்ல இது. கிழக்கு லண்டனில் மாநாடுகள், கண்காட்சிகள் நடக்கும் எக்செல் கண்காட்சி மையத்தைத் தற்காலிக மருத்துவமனையாக மாற்றி உள்ளது பிரிட்டன் அரசு.

இந்த மருத்துவமனையில் நான்காயிரம் படுக்கை வசதிகள் இருக்கும். 87, 328 சதுரடி கொண்ட இந்த மருத்துவமையை உருவாக்க 9 நாட்கள் ஆகி இருக்கிறது. இங்கு 80 வார்டுகள் உள்ளன். ஒவ்வொரு வார்டிலும் 42 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

logo

Apekshakaya

பிந்திய செய்தி