பிரேசிலில் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு:தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கொரோனா வைரசால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள்படி, அங்கு 19,789 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,068 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரேசிலின் பல மாகாணங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதற்கு அந்நாட்டு அதிபர் ஜெயிர் போல்சினாரோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்தக் கட்டுப்பாடுகளால் பொருளாதாரத்தில் தேவையில்லாத தாக்கம் ஏற்படுவதாக அவர் கூறுகிறார்.

இந்தியாவிலேயே அதிக பாதிப்பு

மகாராஷ்டிராவில் இன்று மட்டுமே 92 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுவரை அங்கு 1,666 பேர் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்தியாவிலேயே அதிக கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் தமிழ்நாடு மற்றும் டெல்லி உள்ளன.

மும்பையில் கொரோனா எவ்வாறு பரவியது என்பது குறித்த பிபிசி தமிழின் சிறப்புக் கட்டுரை கீழே.

பணக்கார நகரான மும்பையில் குடிசைப் பகுதிகளின் நிலைமை என்ன?

நரேந்திர மோதி ஆலோசனை

காணொளிக் காட்சி வாயிலாக மாநில முதல்வர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தைத் தொடங்கினார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி.

இந்தக் கூட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமலில் உள்ள ஊரடங்கு குறித்து ஆலோசிக்கப்பட்டு, முக்கிய முடிகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மனித குரங்குகளுக்கு கோவிட்-19 தொற்று பரவும் அபாயம்

மனித இனத்துடன் பரிணாம வளர்ச்சி ரீதியாக நெருங்கிய தொடர்புடையதாகக் கருதப்படும் மனிதக் குரங்குகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மனிதர்கள் எவ்வாறு முடக்கப்பட்டிருக்கிறார்களோ, அதேபோல மனிதக் குரங்குகளும் அவற்றின் வாழ்விடங்களில் இருந்து வெளியேற முடியாத வகையில் முடக்கப்பட்டுள்ளன.

இதனால், மனிதக் குரங்குகள், ஒராங்குட்டான் போன்றவை இருக்கும் உயிரியல் பூங்காக்கள் ஆப்பிரிக்காவில் மூடப்பட்டுள்ளன.

அதிக சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடம் என்பதால் மனிதர்களிடம் இருந்து, அவற்றுக்கு பரவக்கூடிய வாய்ப்பு இருப்பதால் இவை மூடப்பட்டுள்ளன.

எனினும், மனிதர்களிடம் இருந்து மனிதக் குரங்குகளுக்கு வைரஸ் பரவுமா என்பது இதுவரை தெரியவில்லை.

கொரோனாவுக்கு பின் உலகுக்கு காத்திருக்கும் பேராபத்து

இந்த கொரோனா பிரச்னை எப்போது முடியும்? - இதுதான் பலரின் கேள்வி. ஆனால் கொரோனாவுக்கு பின்னர் உலகத்துக்கு ஒரு பேராபத்து இருக்கிறது. அது குறித்து யோசிக்க வேண்டியது அவசியம். அது என்ன? விரிவாக விளக்குகிறது இந்த காணொளி.

இலங்கை கடற்படை பாதுகாப்பு

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வரும் நிலையில், இந்தியர்கள் எவரும் நாட்டிற்குள் நுழையாத வண்ணம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்தியர்களை நாட்டுக்குள் வராமல் கண்காணிக்கும் இலங்கை கடற்படை

உலக சுகாதார நிறுவனத் தலைவர் என்ன பேசினார்?

WHO chief

உலக நாடுகள் அவசரப்பட்டு ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்தினால், மீண்டும் மிகப்பெரிய பாதிப்புகளை சந்திக்கக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொருளாதார தாக்கம் இருக்கும் என்றாலும், ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்துவது குறித்து நிதானமாக செயல்பட வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என்றாலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஜெனீவாவில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய டெட்ரோஸ், சில ஐரோப்பிய நாடுகளில் இந்த பெருந்தொற்றின் தாக்கம் குறைந்து வருவது நல்ல அறிகுறியாக இருப்பதாக குறிப்பிட்டார்.

ஆனால், அவசரப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்கினால், பாதிப்பு எண்ணிக்கை மிக மோசமாக அதிகரிக்கும் என்று டெட்ரோஸ் எச்சரித்தார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது எவ்வளவு ஆபத்தானதோ, அதே ஆபத்து இத்தொற்று குறையும்போதும் இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்துவது குறித்து ஒவ்வொரு அரசாங்கத்துடன் இணைந்து உலக சுகாதார நிறுவனம் தனித்திட்டம் இடும் என்று தெரிகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம்

இந்தியா - 24 மணிநேரத்தில் 1035 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,000-ஐ கடந்துள்ளது.

தற்போது சிகிச்சை பெற்றுவரும் 6,565 பேர், உயிரிழந்த 239 பேர் உள்பட இதுவரை 7,447 பேர் இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்று இந்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை தெரிவித்துள்ளது.

குணமடைந்த அல்லது நாட்டை விட்டு வெளியேறிய 643 பேரும் இதில் அடக்கம்.

கடந்த 24 மணி நேரங்களில் மட்டும் 40 பேர் இறந்துள்ளனர்; 1,035 பேருக்கு புதிதாக தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஒரே நாளில் 2000 பேர் பலி

உலகில் எந்த நாடுகளிலும் இல்லாத அளவிற்கு, அமெரிக்காவில் கொரோனா வைரஸால் ஒரே நாளில் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இத்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட இத்தாலியைவிட அமெரிக்காவில் அதிகம் பேர் உயிரிழப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது இந்த தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் வேகம் குறைந்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது சற்று ஊக்கம் அளிக்கும் வகையில் இருந்தாலும், இன்னும் உயிரிழப்புகளின் உச்சத்தை அமெரிக்கா எட்டவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டு, பின்னர் குறையத் தொடங்கும் என்றும், மே ஒன்றாம் தேதி வாக்கில் ஒரு நாளில் 970 உயிரிழப்புகள் என்ற வண்ணம் எண்ணிக்கை சரியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நகரமான நியூயார்க்கிலும் இந்த வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்து கொண்டிருப்பதாக அதன் ஆளுநர் ஆண்ட்ரூ க்யூமோ தெரிவித்துள்ளார்.

இலங்கை - புதிதாக எழுவருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் புதிதாக ஏழு கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

இதன்படி இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

கோவிட்-19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஏழாகும்.

54 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 136 பேர் மருத்துவனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கை உலக நாடுகள் அவசரப்பட்டு தளர்த்த வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

இது வைரஸ் மீண்டும் பரவ வழிவகுக்கும் என்று அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளார்.

உண்மையை மறைக்கிறதா சீனா?

உலகம் நம்புவதற்காக பொய் தகவலை வெளியிடும் நாடு என்ற கெட்ட பெயரை சீனா சம்பாதித்து வைத்துள்ளது.

எனவே கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டோம் என சீனா சொல்வதையும் பலர் நம்புவதாக இல்லை.

ஏன் சீனா இந்த உண்மைகளை மறைக்க வேண்டும்? அதற்கு என்ன காரணம்? விவரங்கள் காணொளியில்.

மருத்துவப் பணிக்கு திரும்பும் 'மிஸ் இங்கிலாந்து'

தற்போது மிஸ் இங்கிலாந்தாக இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர், பிரிட்டனில் கொரோனா தொற்று தீவிரமாக பரவும் இந்த நேரத்தில், மருத்துவ பணியை தொடர விரும்புவதாக கூறியுள்ளார்.

"தமிழ்நாடு இரண்டாம் கட்டத்திலேயே இருக்கிறது"

கொரோனா நோய்த் தொற்று பரவுவதில் தமிழ்நாடு இன்னும் இரண்டாம் கட்டத்திலேயே இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்கள், தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோருக்கு சோதனைகளை முடித்துவிட்டால் இந்த நோய் கட்டுப்பாட்டிற்கு வருமென்ற நம்பிக்கை இருக்கிறது.

logo

Apekshakaya

பிந்திய செய்தி