1200 x 80 DMirror

 
 

மலேசிய பிரதமரின் அரசியலுக்கு உதவும் கொரோனா வைரஸ்,கொரோனா வைரஸ் தொற்று விவகாரத்தைப் பிரதமர் மொகிதின் யாசின் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார் என மலேசிய மூத்த செய்தியாளர் காதிர் ஜாசின் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் தனது அரசுக்குள்ள பெரும்பான்மையை பிரதமர் மொகிதின் நிரூபிக்க வேண்டி இருக்கும் பட்சத்தில் தமக்கான பெரும்பான்மையை திரட்ட கொரோனா வைரஸ் விவகாரம் அவருக்குப் போதுமான அவகாசத்தை வழங்கியுள்ளதாகக் கருதவேண்டி உள்ளது என காதிர் ஜாசின் வலைத்தளப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

மலேசிய பிரதமர் மொகிதின் யாசின்

சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கிக் கொள்கிறாரா மலேசிய பிரதமர்?

விழுப்புரத்தில் தவறுதலாக விடுவிக்கப்பட்ட வட இந்திய கொரோனா நோயாளி பிடிபட்டார்

கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு விழுப்புரம் மருத்துவமனையில் இருந்து தவறுதலாக விடுவிக்கப்பட்ட டெல்லியைச்சேர்ந்த இளைஞர் செங்கல்பட்டு அருகே ஒரு வாரத்துக்குப் பிறகு பிடிபட்டுள்ளார்.

டெல்லியைச் சேர்ந்த அந்த 30 வயது இளைஞர் கடந்த 6ஆம் தேதி கொரோனா அறிகுறி காரணமாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், டெல்லி இளைஞர் உட்பட 26 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனையில் தெரியவந்ததாக கூறி ஏப்ரல் 7-ஆம் தேதி அவர்களை மருத்துவமனையிலிருந்து அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில், கொரோனா தொற்று இல்லை என்று அனுப்பி வைக்கப்பட்ட 26 பேரில் 4 பேருக்குகொரோனா தொற்று இருப்பதாக மறுநாள், அதாவது ஏப்ரல் 8-ஆம் தேதி சுகாதாரத்துறை தெரிவித்தது. இதையடுத்து தவறுதலாக விடுவிக்கப்பட்ட நால்வரில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் கண்டறியப்பட்டு மருத்துவமனையில் மீண்டும் சேர்க்கப்பட்டனர். ஆனால், டெல்லியைச் சேர்ந்த 4வது நபர் எங்குச் சென்றார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து தேடத்தொடங்கினர்.

விழுப்புரம் மாவட்டம் மற்றும் அருகில் உள்ள கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை யூனியன் பிரதேச காவல் நிலையங்களுக்கு மாயமான இளைஞரின் விவரங்கள் மற்றும் புகைப்படம் அனுப்பிவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாயமான இளைஞர் விதிமுறைகளை மீறியதாக அவர் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் நோய்த் தொற்று தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே, உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 7 தனிப்படைகள் அமைத்து தேடுதல் பணியைத் தீவிரப்படுத்தினார் விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார். மேலும், மாயமான இளைஞர் சென்னை மற்றும் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றிருக்கும் வாய்ப்பிருந்ததால், அந்த இளைஞர் பற்றிய தகவல் அடங்கிய சுவரொட்டிகளை தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உளுந்தூர்பேட்டை முதல் சென்னை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒட்டினர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட நபர் செங்கல்பட்டு படாளம் பகுதியில் இருப்பதாக லாரி ஓட்டுநர் ஒருவர் விழுப்புரம் காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தார். இதனைத் தொடர்ந்து, செங்கல்பட்டு விரைந்த விழுப்புரம் காவல் துறையினர் பாதிக்கப்பட்ட நபரை இன்று மாலை 7 மணியளவில் கைது செய்து அழைத்துவந்து விழுப்புரம் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், அவருடன் தொடர்பிலிருந்த 4 பேர் கொரோனா தொற்று பரிசோதனை செய்வதற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இன்று 31 பேருக்கு மட்டுமே கொரோனா நோய்த் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

81 நோயாளிகள் இதுவரை குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

முழு விவரங்கள்: தமிழ்நாட்டில் கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 1200-ஐ கடந்தது

மும்பை பாந்த்ரா ரயில் நிலையம் அருகே கூடிய ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்

கொரோனா முடக்கம் காரணமாக இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்த முடக்க நிலை இன்றோடு முடிவுக்கு வருவதாக இருந்ததால், இன்று தங்கள் ஊருக்குத் திரும்பிப் போக ரயில் வரும் என்று நினைத்து, ஆயிரக் கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் மும்பை பாந்த்ரா ரயில் நிலையம் எதிரே குவிந்தனர். ஏற்கெனவே, இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் தொற்று ஏற்பட்டுள்ள மகாராஷ்டிரத்தில் இந்தக் கூட்டம் பதற்றத்தை ஏற்படுத்தியது.

போலீஸ் அதிகாரிகளும், உள்ளூர் தலைவர்களும் தலையிட்டு அவர்களைக் கலைந்து போகச் செய்தனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 96 வயது முதியவர் இன்று காலை மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு டெல்லி சென்று வந்த பின்னர் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரது குடும்பத்தினருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் இளைஞரின் தாத்தாவிற்கும் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை முதியவர் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், "கடந்த 9 ஆம் தேதி அன்று முதியவர் கொரோனா உறுதிசெய்யப்பட்டு தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டார். வயது முதிர்வின் காரணமாக அவரது உடல்நிலையும் மோசமான நிலையில் இருந்தது. இந்த நிலையில் அவருக்கு இன்று காலை கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்." என்றனர்.

கொரோனா தடுப்பு ஊரடங்கு:இந்துவுக்கு இறுதிச்சடங்கு செய்த முஸ்லிம்கள்

ராஜஸ்தானில் உயிரிழந்த ஓர் இந்து ஆணின் இறுதிச்சடங்குக்கு, கொரோனா தடுப்பு ஊரடங்கால் உறவினர்கள் யாரும் வர இயலவில்லை.

இஸ்லாமியர்கள் அவரது இறுதிச்சடங்கை செய்தனர்.

தமிழகத்தில் இன்று 31 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என மாநில சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இதுவரை கோவிட்-19 தொற்றால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1204ஆக உள்ளது.

"இன்று கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டவர்களில் 21 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். மாநிலத்தில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,204. இதில், 33 சிறார்களும் அடக்கம். குணமடைந்தோர் 81 பேர். பலியானார்கள் 12 பேர்," எனத் தெரிவித்தார்ட சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்.

இந்தியாவில் ஒரே நாளில் 1463 தொற்று, 29 மரணம்

மொத்தம் 10 ஆயிரம் பேருக்கு மேல் தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,463 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, 29 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்து இதுவரை எந்த ஒரு 24 மணி நேரத்திலும் இவ்வளவு பாதிப்புகள் இந்தியாவில் ஏற்பட்டதில்லை.

இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 10,815 ஆகியுள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 353 ஆகியுள்ளது. இதுவரை தொற்று ஏற்பட்டவர்களில் 1,190 பேர் குணமடைந்துள்ளனர். இத்தகவல்களை இந்தியாவின் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கொல்கொத்தாவில் வாகனங்களை பரிசோதிக்கும் போலீஸ் காரர் ஒருவர் கொரோனா தொற்றில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக அணிந்திருக்கும் முகக்கவசம்.

கொல்கொத்தாவில் வாகனங்களை பரிசோதிக்கும் போலீஸ்காரர் ஒருவர் கொரோனா தொற்றில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக அணிந்திருக்கும் முகக்கவசம்.Image caption: கொல்கொத்தாவில் வாகனங்களை பரிசோதிக்கும் போலீஸ்காரர் ஒருவர் கொரோனா தொற்றில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக அணிந்திருக்கும் முகக்கவசம்.

பொது முடக்கம்: 'எல்லா அதிகாரங்களும் எனக்கே' என்கிறார் டிரம்ப்

 

அமெரிக்காவில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தை நாடு முழுவதிலும் தளர்த்தும் அதிகாரம் தமக்கே உள்ளது என்கிறார் அதிபர் டொனால்டு டிரம்ப். மாகாண ஆளுநர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களோடு முரண்பட்டு இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார் டிரம்ப். செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியே முடிவுகளை எடுப்பார் என்று தெரிவித்தார். ஆனால், அமெரிக்க அரசமைப்புச் சட்டம் அப்படிச் சொல்லவில்லை. பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கான அதிகாரம் மாகாணங்களிடம் உள்ளன.

செய்தியாளர் சந்திப்பில் இந்தக் கருத்துகளைத் தெரிவிக்கும்போது டிரம்ப்புக்கும், செய்தியாளர்களுக்கும் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது.

கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளில் உள்ள 10 மாகாணங்கள் பொது முடக்கத்தைத் தளர்த்தும் முடிவுகளை எடுத்துள்ள நிலையில் டிரம்ப்பின் இந்த கருத்துகள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்தில் திடீரென அதிகரிக்கும் மரணங்கள்- கோவிட் தவிர வேறு காரணம்?

ஏப்ரல் 3--ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், இங்கிலாந்திலும் வேல்சிலும் இறந்தவர்கள் எண்ணிக்கை திடீரென உயர்ந்துள்ளது.

இந்த அதிகரிப்புக்கு கொரோனா மரணங்கள் ஓரளவு காரணமாக இருந்தாலும், அது தவிரவும் மரணங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. குறிப்பிட்ட வாரத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்சில் இறந்தவர்கள் எண்ணிக்கை, 16,387. தேசிய புள்ளிவிவர அலுவலகம் இந்த வாராந்திர புள்ளிவிவரங்களை வெளியிடத் தொடங்கிய 2005ம் ஆண்டுக்குப் பிறகு இவ்வளவு மரணங்கள் நிகழ்ந்ததில்லை. இந்த மரணங்களில் கொரோனா தொடர்பானவை 3,475 மட்டுமே.

ஓர் ஆண்டின் இந்தக் காலப்பகுதியில் நிகழும் மரணங்களின் சராசரி எண்ணிக்கையைக் காட்டிலும் இது 6,000 அதிகம். ஃப்ளு காய்ச்சல் ஏற்படும் பருவத்துக்குப் பிறகு வழக்கமாக மரணங்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கும்.

இந்த கூடுதல் மரணங்களில் 60 சதவீதம் மட்டுமே கொரோனா வைரசால் நிகழும் நிலையில்ல மீதமுள்ள 40 சதவீதத்துக்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

கொரோனா வைரஸ் மரணங்களில் சில கண்டுபிடிக்கப்படாமலே நிகழலாம், அல்லது தொற்று, பொதுமுடக்கம் தொடர்பான பிற காரணிகளால் இந்த மரணங்கள் நிகழலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக மக்கள் பிற நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளாததாலோ, வன்முறை தொடர்பான மரணங்களாலோ மரணங்கள் அதிகரித்திருக்கலாம்.

இந்த செயலி கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் இந்திய அரசால் வெளியிடப்பட்டிருந்தாலும், இதில் சேகரிக்கப்படும் செல்பேசி எண், வயது, பாலினம், இருப்பிட விவரங்கள் உள்ளிட்ட தனிநபர் விவரங்கள் அதன் பயன்பாட்டாளரின் அந்தரங்க உரிமைக்கு பாதிப்பை உண்டாக்க நேரலாம் என்ற கவலைகளும் எழுந்துள்ளன.

கொரோனா பரவலைத் தடுக்கும் இந்தியாவின் 'ஆரோக்கிய சேது' - அந்தரங்க உரிமைக்கு எதிரானதா?

ஆஸ்திரியாவிலும் போலாந்திலும் ஊரடங்கு தளர்வு

ஆஸ்திரியாவில் ஊரடங்கு நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. 4300 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவில் இருக்கும் சின்ன கடைகள் , காய்கறி, பழங்கள், செடிகள் போன்றவை விற்கும் கடைகள் ஆகியன இன்று முதல் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால் மற்ற சில தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. பொது மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக விலகலை கடைப்பிடிக்க ஒருவரிடமிருந்து மற்றவர் 10அடி விலகி இருக்க வேண்டும் போன்ற வேறு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரியாவில் இதுவரை 14,000 பேருக்கும் மேற்பட்டோருக்கு கொரோனாத்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 7000க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். 368 பேர் உயிரிழந்துள்ளனர்.

போலந்து நாட்டில் ஏப்ரல் 19 முதல் ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளது என போலாந்து சுகாதாரத் துறை அமைச்சர் லூகாஸ் சுமௌஸ்கி கூறியுள்ளார்.

ஆர்.எம்.எஃப் பண்பலையில் பேசிய அவர் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தப்படும் என கூறியுள்ளார்.

இந்த வார தகவல்களை ஆராய்ந்த பிறகு புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் இதற்கான முடிவு எடுக்கப்படும் என அரசு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

25,000 மருத்துவ பணியாளர்களுக்கு உதவும் ஷாரூக் கான்

பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் 25,000 மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு கவசங்கள் மற்றும் ஆடைகளுக்கு தேவையான உதவித்தொகையை வழங்குவதாக கூறியுள்ளார்.

ஏற்கனவே தனது 4 அடுக்கு மாடி அலுவலக இடத்தை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவித்திருந்தார்.

மருத்துவ பணியில் ஈடுபடுபவர்களுக்கும், நோயாளிகளுக்கும் இலவச உணவு அளிப்பதாகவும் அறிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக தற்போது மருத்துவ ஊழியர்களின் நலன் கருதி பாதுகாப்பு கவசங்கள் மற்றும் ஆடைகளுக்கு உதவித் தொகை வழங்குவதாகவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

75,000 பேரை பணியமர்த்த இருக்கும் அமேசான் நிறுவனம்

அமேசான் ஆன்லைன் விற்பனையில் பல ஆர்டர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளதால், இன்னும் நிறைய பணியாளர்களை பணியில் அமர்த்த உள்ளது அந்நிறுவனம்.

அமேசான் நிறுவனம் கடந்த மாதம் 1 லட்சம் பணியாளர்களை பணியில் அமர்த்தியது. தற்போது மேலும் 75,000 பேரை பணியில் அமர்த்தவுள்ளது.

உலகின் பல முக்கிய நாடுகள் முடக்கப்பட்டு மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதால் , பலர் தங்களுக்குத் தேவையான பொருட்களை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து பெற்றுக்கொள்கின்றனர். எனவே தேவை அதிகரித்ததால் வரும் ஆர்டர்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க இன்னும் பல ஊழியர்களை அமேசான் நிறுவனம் பணியமர்த்தவுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட பாதிப்பில் அமெரிக்காவின் மற்ற துறைகளில் வேலை இழந்த தொழிலாளர்களை தங்கள் நிறுவனத்தில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு அமேசான் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ்: சீனாவில் நடப்பது என்ன?

உலகையே முடக்கிப் போட்டுள்ள கொரோனா வைரஸ் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 20 லட்சத்தை நெருங்கி வருகிறது. பலியானவர்களின் எண்ணிக்கை சுமார் 1 லட்சத்து 19 ஆயிரமாக உள்ளது. ஏறத்தாழ 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்த வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கொரோனாவால் முதலில் பாதிக்கப்பட்ட சீனாவில், நேற்று புதிதாக 89 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. யாரும் மரணமடையவில்லை. இதில் 76 பேர் ரஷ்யாவிலிருந்து சீனா வந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை நேற்று முன் தினம் 108-ஆக இருந்தது.

சீனாவின் குவாங்சு மாகாணத்தில் தங்கியிருந்த ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்த 111 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அங்குள்ள ஆப்ரிக்க மக்கள் அவர்கள் தங்கியிருந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் அனைத்து வெளிநாட்டினரையும் சமமாக மதிப்பதாக குவாங்சு அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள 2 மருந்துகளை மனிதர்கள் மீது சோதித்துப் பார்க்க உள்ளதாகச் சீனா தெரிவித்துள்ளது. தற்போது உலகம் முழுவதும் 70 தடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இவற்றில் 3 மருந்துகள் மனிதர்கள் மீது சோதிக்கும் நிலையை அடைந்துள்ளன. இதில் இரண்டு மருந்துகள் அமெரிக்காவிலும், ஒரு மருந்து சீனாவிலும் உருவாக்கப்பட்டுள்ளன.

ஜப்பான் தீவில் 2வது முறை அமல்படுத்தப்படும் அவசர நிலை

கொரோனா

ஜப்பானில் முதன் முதலாக ஹோக்கைடோ தீவில் தான் கொரோனா வைரஸ் பரவ துவங்கியது. இங்கு ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பிறகு நாளடைவில் அவை தளர்த்தப்பட்டது. ஆனால் பல நிபுணர்கள் கூறியது போல இந்த தீவில் மீண்டும் இரண்டாம் கட்டமாக கொரோனா வைரஸ் பரவ துவங்கியுள்ளது.

கடந்த பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் அங்கு கொரோனா வைரஸ் அதிகம் பரவ துவங்கியதால், பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு, மக்கள் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டார்கள். பிறகு வைரஸ் பரவும் எண்ணிக்கையில் சரிவு காணப்பட்டதால், மார்ச் 3ம் வாரம் பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் வழக்கம் போல இயங்க தொடங்கின. ஆனால் தற்போது மீண்டும் அங்குப் பலருக்கு கொரோனா பாதிப்பு பரவி வருகிறது. எனவே தற்போது மீண்டும் அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹோக்கைடோ மட்டும் அல்லாமல் டோக்கியோ , ஒசாகா போன்ற 6 இடங்களில் அவசர நிலை அறிவிப்பு தொடர்ந்து அமலில் உள்ளது. ஜப்பான் முழுவதும் சுமார் 8000 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கென்யாவில் இதுவரை 200க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஆனால் கட்டுப்பாடுகளை மீறி பலர் ஈஸ்டர் விடுமுறையைக் கொண்டாட பார்களில் கூட்டமாகக் கூடி மது அருந்தினர்.

இதனால் அங்குக் காவல் துறையினர் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர். கைதானவர்களில் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் நீதிபதி ஒருவரும் அடங்குவர்.

கென்யாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பால் 9 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்நாட்டில் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு இன்னும் கடுமையான தண்டனை காத்திருக்கிறது என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

ஆப்கானிஸ்தானில் கொரோனா வைரஸ் பேரழிவை ஏற்படுத்தலாம்

ஆப்கானிஸ்தானில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், உலகளவில் கொரோனாவால் பேரழிவை சந்திக்கும் நாடாக ஆப்கானிஸ்தான் இருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடான ஆப்கானிஸ்தானில் சுகாதார உள்கட்டமைப்பு இல்லாததால், 80திற்கும் மேற்பட்ட ஆஃப்கன் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள் உடனடியாக மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

தொண்டு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் வைரஸ் பரவுவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் பல நெருக்கடிகளை ஒரே நேரத்தில் எதிர்கொள்ள முடியாமல் பேரழிவைச் சந்திக்க நேரிடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை கொரோனா பரிசோதனைகள் மிக குறைந்த அளவிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாலிபான்களின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் இந்த சூழலில் அங்கு கொரோனா வைரஸ் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆஃப்கன் மக்கள் தொகையில் சரிபாதியினர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் என்பதால், அங்கு உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. சமீபத்தில் இரானிலிருந்து வெளியேற்றப்பட்ட 1000 பேர் ஆஃப்கனில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். ஆனால் அவர்களுக்கு கொரோனா குறித்த பரிசோதனை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

336 x 200 Sinhala

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி