தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தான் பெரிதும் மதிப்பதாக முன்னாள் ராணுவ தளபதி, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவிக்கிறார்.

பிரபல செய்தி ஊடக நிறுவனமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தில் இறுதித் தோட்டா வரை பிரபாகரன் போராடியுள்ளதாக முன்னாள் ராணுவ தளபதி தெரிவிக்கின்றார்.

பிரபாகரன் பயங்கரவாதியாக இருந்தாலும், இறுதித் தோட்டா வரை அவர் போராடியதை பார்க்கும்போது, தான் ஒரு ராணுவ வீரனாக அவரை பெரிதும் மதிப்பதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

பிரபாகரன் தமக்கு சிறந்ததொரு எதிர்ப்பைக் காட்டியதால் தான் பெருமிதம் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் கைப்பற்றிய அனைத்து பகுதிகளையும் இலங்கை அரசாங்கப் படைகள் கைப்பற்றியதாக உலகிற்கு 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி அறிவித்திருந்ததாக சரத் பொன்சேகா கூறுகிறார்.

எனினும், 19ஆம் திகதியும் முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் - நந்திகடல் பகுதியில் ஆங்காங்கே சில தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் நினைவூட்டினார்.

19ஆம் திகதி தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டமொன்றை நிறைவு செய்து, அலுவலகத்திற்கு செல்லவிருந்த வேளையிலேயே பிரபாகரன் உயிரிழந்தமை தொடர்பிலான தகவல் தனக்கு கிடைத்ததாகவும் அவர் கூறினார்.

யுத்தம் முடிவடைந்ததாக அறிவித்த போதிலும், ஆங்காங்கே சில தாக்குதல்கள் நடத்தப்பட்டு, அந்த தாக்குதல்களும் முறியடிக்கப்பட்டதன் பின்னரே பிரபாகரனின் சடலம் காயங்களுடன் மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

யுத்தம் நிறைவு பெற்றதாக முன்னதாகவே அறிவிக்கப்பட்டாலும், 19ஆம் திகதி அதனை உறுதி செய்ய முடிந்ததாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இலங்கையின் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக தற்போது பதவி வகிக்கும் ஜெனரல் ரவிபிரியவிற்கு பொறுப்பாக வழங்கப்பட்ட படை பிரிவே பிரபாகரன் மீது இறுதித் தாக்குதலை நடத்திதாகவும் அவர் நினைவூட்டினார்.

2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி அதிகாலை 2.30 அளவில் ஆரம்பமான இறுதி மோதல், 19ஆம் திகதி காலையில் நிறைவடைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிரபாகரன் பிறந்தநாளை கொண்டாடிய ஆதரவாளர்கள் கைதாகி விடுவிப்பு

யார் இந்த வேலுப்பிள்ளை பிரபாகரன்?

இறுதித் தருணத்தில், அதாவது 17ஆம் திகதி அளவில் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதான தலைவர்கள் அடங்கலான சுமார் 400 பேர் வரை நந்திகடல் வட பகுதிக்குள் சிக்குண்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இறுதித் தருணம் வரை பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்பதை நாம் அந்த சந்தர்ப்பத்தில் அறிந்திருந்தோம் என சரத் பொன்சேகா கூறுகின்றார்.

இறுதி யுத்தம் முழுவதையும் பிரபாகரன் நேரடியாகவே தலைமையேற்று நடத்தியதை தாம் அறிந்திருந்ததாகவும், அதனால் பிரபாகரன் தப்பிச் செல்லாத வகையிலான நடவடிக்கைகளை தாம் முன்னெடுத்திருந்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

பிரபாகரனை கொன்றதே சரியான விடயம் என தான் எண்ணுவதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

ஏனெனில், பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டிருந்தால், அவர் இன்றைய காலப் பகுதியில் ஒரு பிரபலமான நபராக இருந்திருப்பார் என அவர் குறிப்பிடுகின்றார்.

பிரபாகரனை உயிருடன் பிடித்திருந்தாலும், இன்றைய தினத்தில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை அவர் தனது அதிகாரத்திற்குட்பட்ட பகுதியாக மாற்றியிருப்பார் என்பதில் சந்தேகம் கிடையாது என அவர் கூறியுள்ளார்.

பிரபாகரன் முதலாவது துப்பாக்கி தோட்டாவை பயன்படுத்திய 1975ஆம் ஆண்டில் தான், யாழ்ப்பாணத்திலுள்ள முகாமொன்றிற்கு பொறுப்பாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பிரபாகரன் தனது முதலாவது தோட்டாவை பயன்படுத்தும் போதே, தான் அதே பகுதிக்கு பொறுப்பாக கடமையாற்றி வந்திருந்ததாகவும் அவர் நினைவூட்டினார்.

1981ஆம் ஆண்டு காலப் பகுதியிலேயே பிரபாகரன் முதலாவது சிப்பாய் ஒருவரை சுட்டு கொலை செய்ததாக சரத் பொன்சேகா தெரிவிக்கிறார்.

அன்றைய தினம் முதலே பிரபாகரன் ராணுவத்துடன் மோதல்களை ஆரம்பித்திருந்தார் எனவும், அப்போது கூட தான் யாழ்ப்பாணத்திலேயே இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

1983ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வைத்து ராணுவத்தினரை கொலை செய்த சம்பவத்தை அடுத்து, நாட்டில் ஏற்பட்ட கறுப்பு ஜுலை கலவரத்தை அப்போதைய அரசியல்வாதிகள் சரியாக கையாளாததால், பிரபாகரன் பாரிய சக்தியாக வலுவானார் எனவும் சரத் பொன்சேகா தெரிவிக்கிறார்.

ஈழப் போர் நடந்த நிலையில், ஒவ்வொரு தடவையும் யுத்தம் மீள ஆரம்பிக்கப்படும் சந்தர்ப்பங்களில் பிரபாகரன் மேலும் வலுவான ஒருவராகவே திகழ்ந்தார் என அவர் சுட்டிக்காட்டினார்.

2001ம் ஆண்டு இறுதி யுத்த நிறுத்தம் ஆரம்பிக்கப்படும் சந்தர்ப்பத்தில் விடுதலைப் புலி உறுப்பினர்கள் வசம் 12 ஆயிரம் படையினரே இருந்ததாக கூறிய சரத் பொன்சேகா, யுத்தம் நிறுத்தம் முடிவடையும் போது அந்த தொகை 35 ஆயிரம் வரை அதிகரித்திருந்ததாக அவர் கூறினார்.

அது மாத்திரமன்றி, கடற்புலிகள், விமானப்படைகள் என பிரபாகரன் 4ஆவது ஈழப்போரில் மேலும் வலுவடைந்தவராக திகழ்ந்தார் என சரத் பொன்சேகா தெரிவிக்கின்றார்.

பிரபாகரன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உறங்கிக் கொண்டிருக்கவில்லை எனவும், அனைத்து சந்தர்ப்பங்களிலும் பாரிய அர்ப்பணிப்புடன் அவர் கடமையாற்றியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவரின் அர்ப்பணிப்பினாலேயே, கீழ் மட்டத்திலுள்ள உறுப்பினர்கள் அவர் மீது நம்பிக்கை வைக்க ஆரம்பித்தார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறான நம்பிக்கை கொண்டவர்களே பின்னர் தற்கொலை குண்டுதாரிகளாக மாற்றம் பெற்றார்கள் எனவும் சரத் பொன்சேகா கூறுகின்றார்.

பிரபாகரன் தன்மீது 2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தியதாகவும் எனினும் பிரபாகரனை பழி வாங்கும் எண்ணம் தனக்கு இறுதி வரை இருக்கவில்லை எனவும் சரத் பொன்சேகா தெரிவிக்கின்றார்.

ஆதாரம்: BBC 

logo

Apekshakaya

பிந்திய செய்தி