இலங்கையில் கடந்த இரண்டு வருடங்களில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள் தொடர்பில் சிங்கள கடும்போக்குவாதிகள் கைது செய்யப்பட்டபோதிலும், அவர்களுக்கு தண்டனை வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அமெரிக்க, இராஜாங்கத் திணைக்களத்தின், இலங்கையின் மத சுதந்திரம் குறித்த 2019ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க பொலிஸாரின் தாக்குதலினால், கறுப்பினத்தவரான ஜோர்ஜ் ப்ளொய்ட் உயிரிழந்ததை அடுத்து, இந்த சம்பவத்திற்கு உலகளவில் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில், அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த வருடத்தில் மாத்திரம் கிறிஸ்தவர்களை இலக்கு இலங்கையில் சுமார் 100 தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

”தேசிய கிறிஸ்தவ கூட்டணியின் (NCEASL) புள்ளி விபரங்களுக்கு அமைய, தேவாலயங்கள் மீதான தாக்குல், போதகர்கள் மற்றும் அவர்களைப் பின்பற்றுபவர்களை அச்சுறுத்துவது மற்றும் ஊழியத்திற்கு தடை விதித்தல் உள்ளிட்ட 94 சம்பங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.  எவ்வாறெனினும், 2018இல் 88 சம்பவங்களே பதிவாகியிருந்தது” என இலங்கையின் மத சுதந்திரம் குறித்த 2019ஆம் ஆண்டுக்கான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கையில் இந்த விடயம் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

”மத சிறுபான்மை குழுக்களுக்கு எதிராக உடல்ரீதியான தாக்குதல்கள் மற்றும் துன்புறுத்தல்களில் பொலிஸார் மற்றும் உள்ளூராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக, தேசிய கிறிஸ்தவ கூட்டணி (NCEASL) மற்றும் கிறிஸ்தவ மிஷனரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளதோடு,  பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பொலிஸாரும் அதிகாரிகளும் பெரும்பாண்மையினருக்கு சார்பாகவே செயற்பட்டுள்ளதாகவும், கிறிஸ்தவ அமைப்பு குறிப்பிட்டுள்ளது”

திகன மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்னர் ஆரம்பமான முஸ்லீம் விரோத தாக்குதல்களைத் தூண்டும் வகையில், சிங்கள பௌத்த பெரும்பாண்மையினரின் மகத்துவத்தைப் பற்றிய கருத்தை பரப்புவதற்கு கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான பொது பலசேனா அமைப்பு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தியுள்ளதாக, இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

திணைக்களத்தின் அறிக்கைக்கு அமைய 60ற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் காணொளி காட்சிகளில் வன்முறையில் அதிகமானோர் ஈடுபட்டிருப்பதைக் காண முடிவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

"கைது செய்யப்பட்டவர்களில் சிங்கள தேசியவாதக் குழுவின் தலைவர் மஹசோன் பிரிவின் அமித் வீரசிங்க, புதிய சிங்கள அமைப்பின் டேன் பிரியசாத் மற்றும் ஊழல் தடுப்பு முன்னணியின் நாமல் குமார ஆகியோர் அடங்குகின்றனர்.”

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் வன்முறைத் தொடர்பில் கடந்த வருட இறுதிக்குள் எவரும் தண்டிக்கப்படவில்லை என வலியுறுத்தியுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், சந்தேகநபர்களை விடுவிப்பதன் ஊடாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பொது மக்களுக்கும் சமமான பாதுகாப்பை வழங்குவதை பொலிஸார் வெளிப்படையாகத் தவிர்த்து வருவதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்திய விடயத்தையும் நினைவூட்டியுள்ளது. 

இருவர் உயிரிழக்கவும், 28 பேர் காயமடையவும், மதஸ்தலங்கள், வியாபார நிலையங்கள் மற்றும் வீடுகள் பலவும் சேதமடையவும் காரணமாக அமைந்த, மலையக முஸ்லிம்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை, எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை நட்டஈடு வழங்கப்படவில்லை எனவும் இலங்கையின் மத சுதந்திரம் குறித்த, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் 2019ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Apekshakaya

பிந்திய செய்தி