1200 x 80 DMirror

 
 

இலங்கை முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது. இந்த அதிகரிப்பானது இந்த தீவு தேசம் தனித்துவமானது, மற்ற நாடுகளைப் போலல்லாமல், கோவிட்-19 வைரஸை "கட்டுப்படுத்த" எம்மால் முடிந்தது என்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் போலிக் கூற்றுக்களை தகர்த்தெரிந்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து 5,920 ஆகவும், சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை அக்டோபர் 21 அன்று 131 முதல் 2,406 ஆகவும் உயர்ந்துள்ளது. எவ்வாறெனினும் ராஜபக்ஷ அரசாங்கம் தொழிற்சாலைகளிலும் ஏனைய பிரதேசங்களிலும் இடையிடையேயான சோதனைகளுக்கு மட்டுமே உத்தரவிட்டுள்ள காரணத்தால், உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் இன்னும் குறைவாகவே உள்ளன.

புதிய தொற்றாளர்களில் பெரும்பாலானவர்கள் ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர்களாக இருந்தபோதிலும், இப்போது பல இடங்களிலும் நோய்த்தொற்றுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், டஜன் கணக்கான கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவற்றின் குடியிருப்பாளர்கள் நடமாடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. நாட்டின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மற்றும் 6,845 பெரிய மற்றும் சிறிய தொழிற்சாலைகளின் இருப்பிடமான கம்பாஹா மாவட்டம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

தொழிலாளி ஒருவரை கொழும்பில் ரயிலில் ஏறுவதற்கு முன்பு சிப்பாய்கள் சோதனை செய்கிறார்கள் (Credit: WSWS)

இந்த ஆண்டு தொடக்கத்தில் உலகளவில் தொற்றுநோய் பரவல் வெடித்த போதும், ஜனவரி பிற்பகுதியில் இலங்கையில் முதல் தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்ட போதும், கடுமையான கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த அரசாங்கம் மறுத்துவிட்ட காரணத்தால் உண்மையான நிலைமை மூடிமறைக்கப்படுகிறது.

கம்பஹாவின் மினுவங்கொடவில் உள்ள ஒரு பிராண்டிக்ஸ் தொழிற்சாலையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கடந்த மாதம் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக புகார் எழுந்ததையடுத்து, தொற்றுநோய்களின் அதிகரிப்பு குறித்த தகவல்கள் வெளிவந்தன. பிராண்டிக்ஸ் ஒரு இலங்கையின் முதன்மையான ஆடை உற்பத்தியாளர்கள், தீவில் பல ஆலைகளைக் கொண்டுள்ளது. ஒரு ஊழியர் மருத்துவ சிகிச்சை அளிக்காவிட்டால் வேலை செய்ய மறுத்துவிட்டார், பின்னர் ஒரு மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்ட பின்னர் கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தொழிலாளர்கள் மத்தியில் அதிகரித்து வரும் கோபத்தை எதிர்கொண்ட நிலையில், சுகாதார அதிகாரிகள் மினுவாங்கொடை தொழிற்சாலையில் உள்ள அனைத்து பிரன்டிக்ஸ் ஊழியர்களையும் பரிசோதித்தனர். அதன் மூலம் 1,400 பேர் கொண்ட தொழிலாளர்களில் குறைந்தது 1,200 பேரும், அவர்களது நூற்றுக்கணக்கான கூட்டாளிகளும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டுபிடித்தனர்.

சுகாதார அதிகாரிகள், சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், அங்கிக்குமான 15,000 பரிசோதனைகளை மேற்கொண்டு, திங்களன்று 224 தொற்றாளர்களை கண்டுபிடித்தனர். இலங்கையில் உள்ள 16 சுதந்திர வர்த்தக வலயங்கள் உட்பட, முதலீட்டு சபை நிறுவனங்களில் சுமார் ஒரு மில்லியன் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.

இந்த சம்பவங்கள், போதுமான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த அரசாங்கம் மறுத்ததன் கடுமையான மற்றும் குற்றவியல் தன்மையை அம்பலப்படுத்துகின்றன. கடந்த வாரம், தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய நிறுவனங்களின் பிரதிநிதியுடன் கலந்துரையாடிய பின்னர், "நாட்டை வழமைபோல் பராமரிப்பதும் தொழிற்சாலைகள் சுகாதார பாதுகாப்பு முறைகளுடன் பராமரிப்பதுமே" அரசாங்கத்தின் கொள்கை என்று அறிவித்தார்.

இதையே எதிரொலித்த, கொவிட்-19 வரைஸ் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரான இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவும், முடக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்கள், தங்கள் வேலைத்தள அடையாள அட்டைகளை ஊரடங்கு அனுமதி அட்டைகளாக பயன்படுத்தி வேலைக்குச் செல்லலாம் என்று வலியுறுத்தினார்.

அரசாங்கம், “சமூக நோய் எதிர்ப்பு சக்தி” (herd immunity) என்பதையே கொவிட்-19 வைரஸுக்கு பதிலிருப்பாக பிரகடனம் செய்யாமல் பின்பற்றுகின்றது. “சமூக நோய் எதிர்ப்பு சக்தி” எனப்படுவது, வைரஸ் தடையின்றி பரவ அனுமதிக்கப்பட்டால், அது மக்கள் மத்தியில் பரவி தானாகவே அழிந்துவிடும், என்ற பொய்யான கூற்று ஆகும். ஆனால் ACCESS ஹெல்த் இன்டர்நேஷனல் தலைவரும் விஞ்ஞானியுமான வில்லியம் ஹசெல்டின், சமீபத்தில் எச்சரித்தவாறு, “சமூக நோய் எதிர்ப்பு சக்தி என்பது, வெகுஜன படுகொலைக்கான மற்றொரு சொல்,” ஆகும்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இன்னும் பலரும் பின்பற்றும் இந்த சமூக நோய் எதிர்ப்பு சக்தி எனப்படுவது, ஒரு பேரழிவை உருவாக்கியுள்ளது. உலகளவில், 40 மில்லியனுக்கும் அதிகமானவர்களை கொவிட்-19 பாதித்துள்ளதுடன், திங்களன்று, மரண எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்தது. இந்த வாரம், தொற்றுநோய் குறித்த இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழுவில் உறுப்பினராக உள்ள பேராசிரியர் மனிந்திர அகர்வால், பெப்ரவரி மாதத்திற்குள் இந்தியாவின் 130 கோடி மக்களில் பாதி பேர் பாதிக்கப்படுவார்கள் என்று எச்சரித்தார்.

எந்தவொரு பொதுமுடக்கத்தையும் அமுல்படுத்துவதற்கு முன்னதாக, ராஜபக்ஷ அரசாங்கம் மார்ச் 20 வரை காத்திருந்தது. பின்னர், ஏப்ரல் மாத இறுதியில் பெருவணிகத்தின் அழைப்புகளுக்கு பதிலிறுப்பாக, பொருளாதாரத்தை மீண்டும் திறக்க உத்தரவிட்டது.

ஆரம்பத்தில் இருந்தே, கொவிட்-19 வரஸுக்கு கொழும்பின் பதில், ஒரு இராணுவவாத தன்மையைக் கொண்டிருந்தது. அது இராணுவத் தளபதி சில்வாவை கொவிட்-19 வைரஸை தடுக்கும் தேசிய செயலணிக்கு தலைவராக நியமித்து, மருத்துவ நிபுணர்களின் பங்கை அலட்சியம் செய்துவிட்டது.

அரசாங்கக் கொள்கையை விமர்சித்த ஒருவர் ஏற்கனவே மௌனமாக்கப்பட்டுவிட்டார். மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் (எம்.ஆர்.ஐ.) தலைவர் வைத்தியர் ஜெயருவன் பண்டார, தொற்றுநோயின் புதிய பரவலானது கடந்த சில மாதங்களாக கொவிட் -19 வைரஸ் சமூகத்தில் இருந்து வந்துள்ளதைக் காட்டுகின்றது என ஊடகங்களுக்கு தெரிவித்தார். அவர் உடனடியாக பதவி விலக்கப்பட்டு வேறு ஒருவர் நியமிக்கப்பட்டார்.

மருத்துவ நிபுணர் ஆலோசனையைப் புறக்கணித்த ராஜபக்ஷ அரசாங்கம், மார்ச்-ஏப்ரல் பொதுமுடக்கத்தின் போதும், முன்னும் பின்னும், போதுமான சுகாதார நிதியை வழங்க மறுத்துவிட்டதுடன் பல தசாப்தங்களாக சீரழிவில் இயங்கி வரும் பொது சுகாதாரத் துறையை மறுசீரமைக்கின்றது.

அதற்கு பதிலாக, வணிக வங்கிகள் ஊடாக நிறுவனங்களுக்கு 150 பில்லியன் ரூபாய் (814 மில்லியன் டாலர்) வழங்குமாறு நாட்டின் மத்திய வங்கிக்கு ராஜபக்ஷ உத்தரவிட்டார். இந்த நிதிகள் பிரதானமாக பெருவணிகங்களுக்கு பயனளித்தன. மத்திய வங்கியானது கடந்த வாரம், சுமார் 178 பில்லியன் ரூபாயை விநியோகித்ததாக பெருமையாகக் கூறியதுடன் மேலும் நிதியை விடுவிக்கத் தயாராக உள்ளதாகவும் அறிவித்தது.

ராஜபக்ஷ அரசாங்கம், தயக்கமின்றி, அதிகமான வெளிநாட்டுக் கடன்களை எடுத்து, பாரிய வெளிநாட்டுக் கடன்களைப் பெறுவதுடன் பிரமாண்டமான வெளிநாட்டுக் கடன் தவணைகளையும் சர்வதேச வங்கிகளுக்கு செலுத்துகிறது -இந்த ஆண்டு தவணை மட்டும் 4.5 பில்லியன் டொலர் ஆகும். சுகாதாரத் சேவைக்கு அது அடுத்த ஆண்டு பாதீட்டில் ஒதுக்கீடு செய்துள்ள தொகை வெறும் 159 பில்லியன் ரூபாய் மட்டுமே. தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு எதிரான அடக்குமுறை அரசு இயந்திரங்களை வலுப்படுத்துவதற்காக பாதுகாப்பு மற்றும் "உள்நாட்டு பாதுகாப்புக்கான" அடுத்த ஆண்டு ஒதுக்கீடுகள் 500 பில்லியன் ரூபாயை தாண்டும்.

பெரும் வணிகத்தின் இலாபங்களை பாதுகாத்து, சர்வதேச வங்கிகளுக்கான அதன் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதே கொழும்பின் பிரதான அக்கறை ஆகும். ஆனால் எந்த செலவில்?

ஏப்ரல் மாதத்தில், ஜனாதிபதி இராஜபக்ஷ நிறுவனங்களை மீண்டும் திறக்கும்போது, குறைந்தபட்ச எண்ணிக்கையிலான தொழிலாளர்களை மட்டுமே அழைக்குமாறு அறிவுறுத்திய அதே வேளை, பாரியளவிலான வேலை மற்றும் ஊதிய வெட்டுக்களையும் வேலை நேரத்தை நீடிப்பதையும் அனுமதித்தார்.

பொதுமுடக்கத்தின் போது, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திரும்புவதையும் அரசாங்கம் தடுத்தது. அவர்களில் பெரும்பாலோர் மத்திய கிழக்கில் வேலை செய்கின்றார்கள். பின்னர் அது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களை திரும்பிவர அனுமதித்தாலும், இந்த தொழிலாளர்கள் மீண்டும் தடைசெய்யப்பட்டுள்ளனர். இந்த தொழிலாளர்களில் பலர் இப்போது தெருக்களில் பட்டினி கிடப்பதுடன் பல டஜன் பேர் கொவிட-19 வைரஸால் மரணித்துள்ளனர்.

இலங்கையில் உழைக்கும் மக்கள் இப்போது அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பை முகங்கொடுத்து வருகின்றனர். உதாரணமாக, உணவு பற்றாக்குறை செப்டம்பர் மாதத்தில் 11.5 சதவீதமாக உயர்ந்தது. ஏழை விவசாயிகள் வழக்கமான அரசாங்க மாணியங்களைப் பெறாததோடு உற்பத்தி செலவுகள் அதிகரித்து வருகின்றன.

செப்டம்பர் 30 அன்று, உலக வங்கியானது ஒரு சராசரி தொழிலாளி அல்லது இலங்கையில் கிராமப்புற ஏழைகளுக்கு பெறுவதற்கு சாத்தியமற்ற நாளொன்றுக்கு 3.50 டொலர் வருமானத்திற்கு எதிராக அளவிடப்படும்போது, இலங்கையில் வறுமை கடந்த ஆண்டு 8.5 சதவீதத்திலிருந்து 13.5 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று அறிவித்தது.

தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் நல்வாழ்வு பற்றி அரசாங்கம் அக்கறை காட்டவில்லை, மாறாக அதன் பிற்போக்கு கொள்கைகளுக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் தவிர்க்கமுடியாத அரசியல் வெடிப்புகளை அடக்குவதற்கு, ஒரு சர்வாதிகார ஆட்சியை ஸ்தாபிப்பதிலேயே அது ஆர்வம் காட்டுகின்றது. அது ஜனாதிபதிக்கு பெரும் அதிகாரங்களை வழங்கும் அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தை பற்றி தற்போது பாராளுமன்றத்தில் "விவாதம்" நடத்தி வருகிறது.

தேசிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உள்ளிட்ட இலங்கையின் அனைத்து எதிர்க்கட்சிகளும், தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளன. வைரஸைக் காரணம் காட்டி, 20 வது திருத்தத்திற்கு எதிரான அதன் போலி போராட்டங்களை ஐக்கிய மக்கள் சக்தி இரத்துச் செய்துவிட்டது.

முதலாளித்துவ கட்சிகள் அரசியலமைப்பு மாற்றங்கள் குறித்த விவாதத்தை ஒத்திவைக்குமாறு கோழைத்தனமான வேண்டுகோள் விடுத்தாலும், அரசாங்கத்தின் சர்வாதிகார ஆட்சி வழிமுறைகளையோ அல்லது நிர்வாகத்தின் இராணுவமயமாக்கலையோ அவை எதிர்க்கவில்லை.

தொற்றுநோய்களின் போது "பொருளாதாரத்தை எவ்வாறு இயக்குவது என்பதைப் பற்றி தீவிரமாக சிந்திக்க" வேண்டும் என போலி-இடது முன்நிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரதமருக்கு கடிதமொன்றை எழுதிய மு.சோ.க. "வேறுபாடுகள் இருந்தாலும்" கொவிட்-19 வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான ஆதரவை வழங்குவதாக தெரிவித்திருந்தது.

போலி இடதுசாரிகளின் ஆதரவுடன், தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துடனும் பெருவணிகத்துடனும் வெளிப்படையாக தங்களை இணைத்துக் கொண்டு, தேசிய பொருளாதாரத்தை பராமரிக்கும் போர்வையில், அவற்றின் “வேலைக்குத் திரும்பும்” கொள்கைகளை ஆதரிக்கின்றன.

சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவைகள் ஊழியர் சங்கத் தலைவர் அண்டனி மார்கஸ் [தற்போதைய நெருக்கடியில்] சுகாதார வழிகாட்டுதல்களை அமல்படுத்துவதன் மூலம் உற்பத்தி நடவடிக்கைகளை பராமரிப்பதே பொருத்தமான தீர்வு,” என ஊடகங்களுக்குத் தெரிவித்தார் இது நிறுவனங்களின் பாஷை ஆகும்.

தொழிற்சங்கங்கள் மற்றும் போலி இடதுசாரிகளின் துரோகப் வகிபாகத்தை எதிர்த்து, சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), ராஜபக்ஷ அரசாங்கத்தின் கொலைகார நிகழ்ச்சி திட்டத்தை எதிர்த்துப் போராட பின்வரும் கொள்கைகளை முன்வைக்கின்றது.

* அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் உயர்தர பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவது உட்பட சுகாதார உட்கட்டமைப்பை முழுமையாக மேம்படுத்த உடனடியான நிதி ஒதுக்கீடு வேண்டும்.

* கடுமையான சுகாதார நிலைமைகளின் கீழ், அத்தியாவசிய சுகாதார மற்றும் உணவு உற்பத்தித் தொழில்களில் மட்டுமே உற்பத்தியை தொடர வேண்டும். வேலை இழப்பு வேண்டாம், ஏனைய அனைத்து தொழிலாளர்களுக்கும் முழு ஊதியத்துடனான விடுமுறை வேண்டும.

* அனைத்து சுயதொழில் செய்பவர்கள், ஏழை விவசாயிகள் மற்றும் மீனவர்கள் உட்பட உத்தியோகபூர்வமற்ற துறையில் உள்ள அனைவருக்கும் போதுமான மற்றும் நிபந்தனையற்ற நிதி உதவி வழங்கப்பட வேண்டும்.

அனைத்து தொழிலாளர்களினதும் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்காக போராடுவதற்கும் அவர்களின் உரிமைகளைப் காப்பதற்கும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்ப வேண்டும். இந்த நடவடிக்கைக் குழுக்கள் கிராமப்புற ஏழைகளைச் சென்றடைந்து அவர்களை அணிதிரட்ட வேண்டும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் உலக சோசலிச வலைத்தளமும் விளக்கியுள்ளபடி, கொவிட்-19 வைரஸுக்கு எதிரான போராட்டம், முதலில் ஒரு மருத்துவ பிரச்சினை அல்ல. மாறாக தொற்றுநோய்க்கு எந்தவொரு தேசியவாத தீர்வும் கிடையாது என்பது புரிந்துகொள்வதன் அடிப்படையிலான ஒரு அரசியல் போராட்டமாகும்

இந்த கோரிக்கைகளை பூகோள முதலாளித்துவத்திற்கு எதிரான சமரசமற்ற போராட்டத்தின் மூலமாகவும், ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையிலும் மட்டுமே அனுக முடியும். தொற்று நெருக்கடி வெடித்ததிலிருந்து, சோ.ச.க. இன பாகுபாடுகள் கடந்து தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் இந்த வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தை ஆழப்படுத்தியுள்ளது.

இந்த போராட்டத்தின் மையமானது தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டமாகும். அத்தகைய அரசாங்கம், வங்கிகள், பெருந்தோட்டங்கள் மற்றும் பெருவணிகங்களை தொழிலாளர்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதோடு அனைத்து வெளிநாட்டு கடன்களையும் நிராகரிக்க வேண்டும். இந்த முன்னோக்கு, தெற்காசிய சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்திற்கான போராட்டத்துடன் பிணைக்கப்பட்டதாகும்.

இந்த வேலைத்திட்டத்திற்காக சோ.ச.க. மட்டும் போராடுகிறது. அதில் இணைந்துகொள்ளுமாறு இலங்கைத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம். அக்டோபர் 28, புதன்கிழமை, இரவு 7 மணிக்கு எமது இணையவழி பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.

WS இணையதளம்

nalan mendis

336 x 200 Sinhala

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி