1200 x 80 DMirror

 
 

அமெரிக்க அதிபர் அந்த நாட்டுக்கான தலைவர் மட்டுமல்ல, கிட்டத்தட்ட உலகின் மிகவும் அதிகாரம் மிக்க நபராகவும் அவர் விளங்குகிறார்.

அவர் செய்யும் செயல்கள், எடுக்கும் முடிவுகள் நமது வாழ்க்கையை மாற்றக் கூடியவை. அதில் டொனால்டு டிரம்ப் விதிவிலக்கல்ல. எனவே, உண்மையிலேயே டிரம்ப் தனது நான்காண்டு ஆட்சியில் உலகில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தினார்?

அமெரிக்கா குறித்த உலகின் கண்ணோட்டம்

டிரம்ப் அமெரிக்காவை அடிக்கடி "உலகின் மிகச் சிறந்த நாடு" கூறி கொள்வதுண்டு. இந்த நிலையில், 13 நாடுகளில் பியூ ரிசர்ச் சென்டர் நடத்திய ஆய்வில், அயல்நாட்டில் அமெரிக்க குறித்த பார்வை மேம்படுவதற்கு டிரம்ப் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை என்று தெரியவந்துள்ளது.

குறிப்பாக, பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்க குறித்த பொது மக்களின் கண்ணோட்டம் கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான நிலைக்கு சென்றுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை அமெரிக்கா கையாண்ட விதம் இதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். அதாவது, இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் வெறும் 15 சதவீதத்தினரே கோவிட்-19 பரவலை அமெரிக்கா சரியாக கையாண்டதாக தெரிவித்துள்ளனர்.

பருவநிலை மாற்றம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உண்மையிலேயே என்ன நினைக்கிறார் என்பதை புரிந்துகொள்வது சற்றே கடினமானது. ஆம், பருவநிலை மாற்றத்தை, "ஒரு விலையுயர்ந்த புரளி" என்றும் கூறும் அதே டிரம்ப், "முக்கியமான விவகாரம்" என்று மட்டுமின்றி அது "எனக்கு மிகவும் முக்கியமானது" என்றும் அவர் கூறி வந்துள்ளதே அதற்கு காரணம்.

ஆனால், அமெரிக்க அதிபராக பதவியேற்று ஆறே மாதங்களில், பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்து டிரம்ப் விஞ்ஞானிகளை திகைக்க செய்தார். உலகின் வெப்பநிலை உயர்வை 2 டிகிரிக்குள் கட்டுப்படுத்த 200 நாடுகள் ஒப்புக்கொண்ட அந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சீனாவுக்கு அடுத்து இரண்டாவதாக உலகிலேயே அதிகளவு பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றும் நாடாக அமெரிக்கா விளங்கும் நிலையில், ஒருவேளை டிரம்ப் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது என்பது இயலாத காரியமாகிவிடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து விலகும் அமெரிக்காவின் முடிவு வரும் நவம்பர் 4ஆம் தேதி, அதாவது அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு அடுத்த நாள் முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த நிலையில், தான் தேர்தலில் வென்றால், அமெரிக்கா மீண்டும் ஒப்பந்தத்தில் இணையுமென்று ஜோ பைடன் வாக்குறுதி அளித்துள்ளார்.

எனவே, அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவு என்பது பருவநிலை மாற்றத்தில் பெரும் தாக்கத்தை செலுத்தும்.

அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஒரே வாரத்தில் டிரம்ப் பிறப்பித்த மற்றொரு உத்தரவு உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உலகில் முஸ்லிம் மக்கள் அதிகம் வாழும் ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது, இந்த கட்டுப்பாடு 13 நாடுகள் மீது அமுலில் உள்ளது.

ஒபாமாவின் பதவிக்காலம் முடிவுற்ற 2016ஐ விட 2019ஆம் ஆண்டில் அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை மூன்று சதவீதம் அதிகரித்துள்ளது.

ஆனால், அதே சமயத்தில் மெக்ஸிகோவில் பிறந்த அமெரிக்கவாசிகளின் எண்ணிக்கையில் சிரிய அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. மேலும், அமெரிக்காவில் படிப்பு, வேலை உள்ளிட்டவற்றிற்காக புலம்பெயர்ந்தவர்களும், அவர்களது குடும்பத்தினரும் அங்கேயே நிரந்தர வசிப்புரிமை பெறுவதற்கான வாய்ப்பும் டிரம்பின் ஆட்சிக்காலத்தில் வெகுவாக குறைந்துள்ளது.

டிரம்பின் குடியேற்றக் கொள்கைக்கு தனியே சின்னம் இருந்தால், அது நிச்சயமாக மெக்ஸிகோவின் எல்லையில் கட்டுவதாக அவர் வாக்குறுதி அளித்த, "பெரிய, அழகான சுவராகத்தான்" இருக்கும். அக்டோபர் 19ஆம் தேதி நிலவரப்படி, அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அமைப்பு, மெக்ஸிகோ உடனான எல்லையில் 597 கிலோமீட்டர் தூரத்துக்கு மட்டுமே எல்லை சுவர் கட்டப்பட்டிருப்பதாகக் கூறுகிறது.

இந்த திட்டம் டிரம்ப் எதிர்பார்த்தபடி பலனை கொடுக்கவில்லை.

ஏனெனில், 2019ஆம் ஆண்டில் அதற்கு முந்தைய 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகளவிலான குடியேறிகள் மெக்ஸிகோ வழியாக அமெரிக்க எல்லைக்குள் நுழைய முயற்சித்து கைதுசெய்யப்பட்டனர்.

வறுமை, உள்நாட்டுப் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் அமெரிக்காவுக்கு அகதிகளாக வருவோர் ஏற்றுக்கொள்ளப்படும் எண்ணிக்கை டிரம்பின் ஆட்சிக்காலத்தில் வெகுவாக குறைந்துள்ளது. அதாவது, 2016ஆம் ஆண்டில் அமெரிக்கா சுமார் 85,000 அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த நிலையில், அந்த எண்ணிக்கை டிரம்ப் பதவியேற்ற அடுத்த ஆண்டே 54,000ஆக குறைந்தது.

அதே சமயத்தில், எதிர்வரும் 2021ஆம் ஆண்டில் அதிகபட்சம் 15,000 பேருக்கு மட்டுமே அடைக்கலம் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. இது அமெரிக்காவில் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் திட்டம் தொடங்கப்பட்ட 1980யிலிருந்து இதுவரையிலான காலத்தில் மிகவும் குறைந்த எண்ணிக்கையாக இருக்கும்.

"என்னை பொறுத்தவரை, நான் அதிகம் பயன்படுத்திய வார்த்தைகளிலேயே 'போலி' என்பதுதான் முதன்மையானது" என்று 2017ஆம் ஆண்டு நேர்காணல் ஒன்றில் டிரம்ப் கூறியிருந்தார்.

ஆனால், கண்டிப்பாக 'போலிச் செய்தி' என்ற சொல்லாடலை டிரம்ப் ஏற்படுத்தவில்லை, ஆனால் அதை அவர் பிரபலப்படுத்தினார். 2016ஆம் ஆண்டு டிசம்பர் முதல் இதுவரையிலான காலத்தில், பேட்டிகள் மற்றும் சமூக ஊடக பதிவுகள் என இந்த சொற்றொடரை அவர் சுமார் இரண்டாயிரம் முறை பயன்படுத்தியிருப்பார் என்று இதை கண்காணித்த Factba.se என்ற இணையதளம் கூறுகிறது.

2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, டிரம்பை போப் பிரான்சிஸ் ஆதரிப்பதாக வெளியான தவறான தகவல் 'போலிச் செய்தி' என்று குறிப்பிடப்பட்டது. ஆனால், அதன் பிறகு, தனக்கு எவற்றிலெல்லாம் உடன்பாடு இல்லையோ அவற்றையெல்லாம் 'போலிச் செய்தி' என்று டிரம்ப் குறிப்பிட ஆரம்பித்தார். இதன் உச்சமாக, தான் தவறாக கருதும் செய்திகளை தேர்ந்தெடுத்து அவற்றுக்கு 'போலிச் செய்தி விருதுகளை' அறிவித்த டிரம்ப், அடுத்து சில குறிப்பிட்ட ஊடக நிறுவனங்களை 'அமெரிக்க மக்களின் எதிரி' என்றும் அழைத்தார்.

இதைத்தொடர்ந்து, பரவல் அடைந்த இந்த சொல்லாடலை தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், சௌதி அரேபியா மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தலைவர்களும் பயன்படுத்த தொடங்கினர். மேலும், செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான அடக்குமுறை மற்றும் வழக்குகளுக்கு நியாயம் கற்பிப்பதற்கும் சிலர் 'போலிச் செய்தியை' பயன்படுத்த தொடங்கினர்.

நம்பகமான செய்திகளுக்கு எதிராக இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலம், அரசியல்வாதிகள் அடிப்படையில் ஜனநாயகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறார்கள் என்றும் இது உண்மையை தெரிந்துகொள்ள மக்கள் சார்ந்துள்ள ஊடகங்களுக்கு எதிரான பார்வையை ஏற்படுத்துவதாகவும் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவும் முடிவுறா போர்களும் மத்திய கிழக்கு நாடுகளும்

கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப் சிரியாவிலிருந்து அமெரிக்க துருப்புக்களை திரும்பப் பெறுவதாக உறுதியளித்ததுடன், "சிறந்த நாடுகள் முடிவற்ற போர்களை எதிர்த்துப் போராடுவதில்லை" என்று கூறினார்.

ஆனால், தரவுகள் கூறுவது சற்று வித்தியாசமான கதையாக இருக்கிறது. இந்த அறிவிப்பு வெளிவந்து ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை எந்தொரு நாட்டிலிருந்தும் முழுமையாக அமெரிக்க துருப்புகள் திரும்ப பெறப்படவில்லை. சிரியாவில் எண்ணெய் கிணறுகளை பாதுகாப்பதற்காக மட்டும் 500 துருப்புகளை டிரம்ப் பணியமர்த்தியுள்ளார். ஆப்கானிஸ்தான், இராக், சிரியாவில் அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளபோதும் இன்னமும் முழுமையாக விலக்கிக்கொள்ளப்படவில்லை.

மத்திய கிழக்கு நாடுகளில் ராணுவ பலத்தை பயன்படுத்தாமலே தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதும் உண்மையே. 2018இல் டெல் அவிவிலிருந்து ஜெருசலேமுக்கு அமெரிக்க தூதரகத்தை மாற்றியதன் மூலமும், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை இஸ்ரேலின் அங்கமாக அங்கீகரிப்பதன் மூலமும் டிரம்ப் முந்தைய அமெரிக்க அதிபர்களின் ஆட்சேபனைகளை மீறி செயல்பட்டார்.

கடந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகியவை இஸ்ரேலுடனான உறவை புதுப்பிக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டபோது "ஒரு புதிய மத்திய கிழக்கின் விடியல்" என்று டிரம்ப் பாராட்டினார். இந்த மாற்றத்திற்கு பின்னால் அமெரிக்காவின் தலையீடு இருந்ததை இது வெளிக்காட்டுகிறது.

சர்ச்சைகள் மற்றும் குற்றஞ்சாட்டுகள் ஒருபுறமிருந்தாலும், டிரம்ப் நிர்வாகத்தின் வெளியுறவு செயல்பாட்டில் மிக முக்கியமான சாதனையாக இது கருதப்படுகிறது. ஏனெனில், 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் சுதந்திரம் பெற்றதிலிருந்து அந்த நாட்டை அங்கீகரிக்கும் மூன்றாவது மற்றும் நான்காவது நாடாக ஐக்கிய அரபு அமீரகமும், பஹ்ரைனும் உருவெடுத்துள்ளன.

தனது ஆட்சிக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை தொடர்ந்து பழித்து வருவதை டிரம்ப் வாடிக்கையாக கொண்டுள்ளார். குறிப்பாக, தான் பதவியேற்ற முதல் நாளே, முந்தைய அதிபர் ஒபாமாவால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 12 நாடுகளுக்கு இடையிலான டிரான்ஸ்-பசிபிக் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து அவர் வெளியேறினார்.

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கையை அமெரிக்கா கருதினாலும், அது பெரும்பாலும் சீனாவுக்கே பலனளித்தது. ஆனால் இந்த ஒப்பந்தம் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புக்கு அச்சுறுத்தலாக அமையுமென்று நினைத்த விமர்சகர்கள் டிரம்பின் இந்த நடவடிக்கையை ஆதரித்தனர்.

மேலும், டிரம்ப் தான், "இதுவரை பார்த்த மிக மோசமான வர்த்தக ஒப்பந்தம்" என்று கூறிய கனடா மற்றும் மெக்ஸிகோவுடனான வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தையும் மறுபரிசீலனை செய்தார். கார் உதிரிபாகங்கள் கொள்முதல் செய்வதற்கான விதிகள் மற்றும் தொழிலாளர் விதிகளை கடுமையாக்கியதை தவிர இதனால் பெரிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.

சீனாவுடனான வர்த்தகப் போர்

உலக நாடுகளுடனான வர்த்தகத்திலிருந்து அமெரிக்கா எவ்வாறு பயனடைகிறது என்பதை மறுநிர்ணயம் செய்வது டிரம்பின் அடுத்த இலக்காக இருந்தது. இதன் விளைவு, சீனாவுடன் வர்த்தகப் போர் தொடங்கியது. உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களும் ஒருவருக்கொருவர் பொருட்களின் மீது நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர் வரிகளை விதித்தன.

இது அமெரிக்க விவசாயிகளுக்கும் தொழில்நுட்ப மற்றும் வாகனத் தொழில்களுக்கும் ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது. தொழில் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி செலவை குறைக்க வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகளுக்கு இடம் மாறியதால் சீனாவும் பாதிக்கப்பட்டது.

2019ஆம் ஆண்டைப் பொறுத்தவரை, சீனாவுடனான அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை அதன் 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சற்று குறைவாகவே இருந்தது. டிரம்ப் நிர்வாகம் விதித்த மேலதிக வரிகளை தவிர்க்க முற்பட்டதால் அமெரிக்க நிறுவனங்கள் குறைவாக இறக்குமதி செய்தன.

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020: டிரம்ப் Vs பைடன் - முன்னணியில் இருப்பது யார்?

கமலா ஹாரிஸ்: அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளிப் பெண் - யார் இவர்?

இருப்பினும், கொரோனா வைரஸ் தொற்று 2020ஆம் ஆண்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா இன்னும் ஏற்றுமதி செய்வதை விட அதிகமான பொருட்களை இறக்குமதி செய்கிறது.

வர்த்தகப் போர் ஒருபுறமிருக்க, தைவான், ஹாங்காங், தென் சீனக் கடல், வீகர் முஸ்லிம்கள் உள்ளிட்ட தனது உள்நாட்டு விவகாரமாக சீனா கருதும் விடயங்களில் அந்த நாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை டிரம்ப் நிர்வாகம் எடுத்து வருவது இருநாடுகளுக்கிடையேயான உறவை மென்மேலும் மோசமடைய செய்துள்ளது.

மேலும், சீன தொழில்நுட்ப நிறுவனங்களின் செயலிகள் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைவதாக கூறி டிக்டாக் உள்ளிட்ட செயலிகளை டிரம்ப் தடைசெய்தார்.

"எங்களது எந்த ராணுவத்தளத்தில் வீரர்கள் இறந்தாலோ அல்லது சேதம் ஏற்பட்டாலோ அதற்கு இரான்தான் பொறுப்பு. இரான் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். இது ஒரு எச்சரிக்கை அல்ல, அச்சுறுத்தல்" என்று டிரம்ப் 2019ஆம் ஆண்டின் புத்தாண்டு தினத்தில் ட்வீட் செய்தார்.

அதற்கு அடுத்த சில நாட்களிலேயே, இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரான ஜெனரல் காசெம் சுலேமானீ அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்ட சம்பவம் உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, இராக்கில் அமெரிக்க துருப்புகள் செயல்பட்டுவந்த குறைந்தது இரண்டு ராணுவ தளங்கள் மீது ஈரானில் இருந்து டஜனுக்கும் மேலான கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

இது ஒரு போராக இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் அப்பாவி மக்கள் இதனால் உயிரிழக்க நேரிட்டது. அதாவது, மேற்கண்ட சம்பவங்கள் நடந்த சில நாட்களிலேயே, இரான் தலைநகர் டெஹ்ரானிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ்வை நோக்கி புறப்பட்ட விமானம் அடுத்த சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 176 பேரும் உயிரிழந்தனர்.

இரானின் புரட்சிகர ராணுவ படைக்கு சொந்தமான முக்கிய தளத்தை ஒட்டி உக்ரைன் விமானம் பறந்தபோது, 'மனித தவறுகளின்' காரணமாக அதை சுட்டு வீழ்த்திவிட்டதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்தது.

இருநாடுகளுக்கிடையேயான மோதல் நிலைக்கு பல்வேறுபட்ட காரணங்கள் இருந்து வந்துள்ளன.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்து வந்த இரானின் ஆட்சியாளர் ஷா அவரது பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்ட 1979ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவும் ஈரானும் முரண்பட்டு வருகின்றன.

2018ஆம் ஆண்டு மே மாதம், 2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிடுவதாக அறிவித்ததன் மூலம் டிரம்ப் இருநாடுகளுக்கிடையே புதிய பதற்றத்திற்கு வித்திட்டார்.

மேலும், ஈரானின் தலைவர்கள் அமெரிக்காவின் விதிகளுக்கு உட்பட வைக்கும் வகையில் அந்த நாடு மீது "முன்னெப்போதுமில்லாத கடுமையான பொருளாதார தடைகளை" டிரம்ப் நிர்வாகம் விதித்தது.

இதனால், ஈரானின் பொருளாதாரம் கடுமையான மந்தநிலைக்குத் தள்ளப்பட்டது. 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள் அந்த நாட்டில் உணவு விலை ஆண்டுக்கு 61% ஆகவும், புகையிலை விலை 80% ஆகவும் அதிகரித்தது. இதனால், பெரும் அவதிக்குள்ளான ஈரானியர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலின் காரணமாக இரு நாடுகளுக்கிடையான பதற்றம் கட்டுக்குள் இருந்தாலும், அவற்றின் உறவில் பெரிய முன்னேற்றமில்லை.

336 x 200 Sinhala

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி