1200 x 80 DMirror

 
 

அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அவர் இலங்கையின் பொருளாதார உறவுகளின் "கடினமாக இருந்தாலும் தேவையான தெரிவுகளுக்கு" அழுத்தம் கொடுப்பார் என தெற்காசிய பிராந்தியத்தின் சிரேஷ்ட அமெரிக்க இராஜதந்திரி தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச அரசாங்கம் இரண்டாவது தடவையாக அதிகாரத்திற்கு வந்ததைத் தொடர்ந்து வேகமாக வளர்ந்து வரும் சீன-இலங்கை பொருளாதார உறவுகள் தொடர்பில் குறிப்பிட்டுள்ள இந்த அறிக்கையின் மூலம், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறு  இலங்கைக்கு அவர் அழைப்பு விடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உத்தியோகபூர்வ சந்திப்பைத் தொடர்ந்து நாளைய தினம் கொழும்புக்கு வெளிவிவகார செயலாளரின் வருகை இடம்பெறவுள்ள நிலையில், அமெரிக்க விமானப்படை துருப்புக்களை ஏற்றிக்கொண்டு ”குளோப்மாஸ்டர் III” போர் விமானம் வெள்ளிக்கிழமை இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

”பாரபட்சமான மற்றும் தெளிவற்ற நடவடிக்கைகளுக்குப் பதிலாக வெளிப்படைத்தன்மை மற்றும் நிலையான பொருளாதார மேம்பாட்டுக்கான எங்கள் திட்டங்களை மீள்பரிசீலனை செய்ய இலங்கையை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். ” என தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியத்திற்கு பொறுப்பான அமெரிக்க வெளிவிவகார சிரேஷ்ட அதிகாரி டீன் தொம்சன் வியாழக்கிழமை வொஷிங்டனில் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

"நீண்டகால செழிப்பிற்கான  பொருளாதார சுதந்திரத்தை பாதுகாக்க இலங்கை கடுமையான ஆனால் முக்கியமான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என நாங்கள் கடுமையாக கேட்டுக்கொள்கிறோம்." என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறி 90 மில்லியன் டொலர் உதவி வழங்குவதற்காக ஒரு முன்னணி சீனக் குழு இலங்கைக்கு வந்த இரண்டு வாரங்களுக்குப் பின்னர் அமெரிக்க வெளிவிவகார செயலாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார்.

"இலங்கையுடனான எங்கள் உறவு நீண்ட காலமாக தொடர்கிறது, இப்போது நாங்கள் எங்கு செல்கிறோம் என்பதை நாங்கள் தெரிவு செய்ய வேண்டும்" என வளர்ந்து வரும் சீனாவுடனான இலங்கையின் உறவு குறித்த கேள்விக்கு தொம்சன் பதிலளித்துள்ளார்.

"இலங்கையின் நீண்டகால ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை ஊக்குவிக்கும் ஜனநாயக ஆட்சி, மனித உரிமைகள், நல்லிணக்கம், மத சுதந்திரம் மற்றும் நீதியை ஊக்குவிக்கவும், அதன் பல்வேறு சமூகங்களின் கௌரவத்தையும் சமத்துவத்தையும் உறுதிப்படுத்தவும் இலங்கையை நாங்கள் தொடர்ந்து கேட்டுக்கொள்கிறோம்." என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு ஆசியாவிற்கான தனது பயணத்தின்போது, இந்தியா, மாலைத்தீவு மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த அரச தலைவர்களை பொம்பியோ சந்திக்க உள்ளார்.

இந்த பயணத்தின் முக்கிய நோக்கம் சீனாவுக்கு எதிராக பிராந்திய அதிகாரத்தை அணி திரட்டுவதாகும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இரண்டாவது முறையாக பதவியை கைப்பற்றும் நோக்குடன் தேர்தலில் களமிறங்கியுள்ள ட்ரம்ப், தனது தேர்தல் பிரச்சாரத்தின் நடுவில், சீனா மீதான தனது கடுமையான நிலைப்பாட்டை வெளியிட்டு வருகின்றார். இவ்வாறான ஒரு சூழலில் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக  இந்த விஜயம் அமைந்துள்ளது.

சீனாவின் பதில்

சீனாவுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டு வரும் பொம்பியோ உள்ளிட்ட  அமெரிக்க அதிகாரிகள் உலகெங்கிலும் உள்ள சீன முதலீட்டை ஒரு "இராஜதந்திர கடன் பொறி" என கண்டித்து, மிகவும் ஏழ்மையான நாடுகளின் தோள்களில் தாங்கமுடியாத அளவு கடன் சுமையை சீனா சுமத்துவதாக  குற்றம் சாட்டி வருவதாக சீனா குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க அதிகாரியின் அறிக்கை ஆசிய பிராந்தியத்தில்  "பனிப்போர் மனநிலையை" காட்டுவதாக சீன வெளிவிவகார  அமைச்சு தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கு இடையிலான சாதாரண உறவுகளை சீர்குலைக்க தமது சக்தியைப் பயன்படுத்துவது சரியான விடயமல்லவென, சீன வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஷாவோ லெஜியன் தெரிவித்துள்ளார்.

சீனாவுடனான உறவுகள் குறித்து கடுமையான தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக அமெரிக்கா அறிவித்ததை அடுத்து, இலங்கையின் அரசாங்க முறிகள் வெள்ளிக்கிழமை கடுமையாக வீழ்ச்சியடைந்ததாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

எவ்வாறெனினும், ஐந்து வருடங்களுக்கு பின்னரான கொழும்புக்கான பொம்பேயின் முதல் விஜயத்தின் நோக்கத்தை ராஜபக்ச அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை. 

nalan mendis

336 x 200 Sinhala

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி