கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கத்திடம் எந்தவிதமான உபாய ரீதியிலான திட்டமும் இல்லையென்பது தெரிகிறதென முன்னிலை சோஷலிஸக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட ஊடக சந்திப்பின்போது கூறினார்.

தொடர்ந்தும் விளக்கமளித்த அவர்,  “ 50 – 100 நோயாளர்கள் கண்டறியப்பட்ட நிலையில், நிலைமை மோசமாக உள்ளதென ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. நாளொன்றுக்கு 400 நோயாளர்கள் கண்டறியப்படும் போது, நாள் தோறும் மரணங்கள் நிகழும் போது பிரச்சினையில்லை என ஊடரங்கை நீக்குகிறார்கள். கொரோனா ஒழிப்பிற்கு அரசாங்கத்திடம் எந்த பொறிமுறையும் இல்லை. எழுத்திலான திட்டமெதுவும் கிடையாது. குறைந்தபட்சம் எழுத்திலல்லாத திட்டம் கூட கிடையாதென்பது தெரிகிறது.

கொரோனா தொற்றின் முதலாவது அலை மற்றும் இரண்டாவது அலைக்கிடையில் பல மாத இடைவெளி இருந்தது. இக்காலத்தில் என்ன செய்தார்கள்? கொரோனா தடுப்பிற்காக அமைத்த விசேட செயலணி இக்காலத்தில் கூடவில்லை. பிரதேசக் கமிட்டிகள் கலைக்கப்பட்டிருந்தன. நோய் சிகிச்சைக்குத் தேவையான எந்த வசதிகளையும் முன்னேற்றவில்லை. இப்போது அரசாங்கம் என்ன செய்கிறதென்றால் கொடி போகும் திசையில் பந்தல் கட்டுகிறது.

மினுவாங்கொட பிரண்டிக்ஸ் கொத்தணி கண்டறியப்பட்ட நேரத்தில் அப்பிரதேசத்தை தனிமைப்படுத்தியிருந்தால் இது நாடு பூராவும் பரவியிருக்காது. கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தி ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும்படி மருத்துவ அதிகாரிகள் ஒக்டோபர் 6ம் திகதி அறிவித்திருந்தனர். ஆனால், மூன்று மாதங்கள் தாமதித்து ஒக்டோபர் 29ம் திகதிதான் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. அப்போதே காலம் கடந்துவிட்டது.

மினுவாங்கொட, பேலியகொட கொரோனா எப்படி தொற்றியதென்று இதுவரை சொல்லவில்லை. இப்போது சாமானிய மக்களுக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்துகிறார்கள். கைது செய்கிறார்கள். பிரண்டிக்ஸ் நிறுவனத்தின் மீது, சீதுவ ஹோட்டல் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மூன்று நாட்கள் கழித்தே மேல் மாகாணத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. பின்னர் 10 நாட்கள் நீடிக்கப்பட்டது. இப்போது நீக்கப்பட்டுள்ளது. திட்டமில்லாமலேயே ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. நீக்கப்பட்டதும் கூட திட்டமெதுவும் இல்லாமல்தான்.

PCR பரிசோதனைக்கு மாற்று பரிசோதனையெனக் கூறி உடற்காப்பு ஊக்கி (Antigen) பரிசோதனை செய்யப் போகிறார்கள். இது சம்பந்தமாக ஆய்வு செய்வதற்காக சுகாதார அமைச்சு குழுவொன்றை அமைத்தது. அந்தக் குழுவின் அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை. உலக சுகாதார அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டாலும் அந்தப் பரிசோதனை இலங்கைக்கு பொருத்தமானது தானா என்று பார்க்க வேண்டும். அதற்காக நியமித்த குழுவின் அறிக்கை கூட வெளிவறாத நிலையில் இரண்டு இலட்சம் பரிசோதனைக் கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அவற்றிக்கு அரசாங்கப் பணம் செலவிடப்பட்வில்லையென அரசாங்கம் கூறுகிறது. ஆனால், அரசாங்கமாக இருந்தாலும், தனியார் துறையாக இருந்தாலும் எப்படி கொண்டுவந்தார்கள்.

கொரோனா தடுப்பிற்கு முன்வரும் நிறுவனங்களுக்கிடையில் தொடர்பாடல் இல்லை. சுகாதாரப் பிரிவுகள், பொலிஸ் மற்றும் இராணுவத்திற்கிடையில் தொடர்ப்பாடல் இல்லை. பெருந்தொற்று பயங்கரமாகப் பரவுகிறது நாட்டை திறக்க முடியாதென தொற்று நோயியல் நிறுவனத்தின் தலைவர் சொல்கிறார்.

எம்புல்தெனிய சந்தியில் வியாபாரிகளால் ரோல்ஸ் விற்க முடியவில்லை ஆகவே நாட்டைத் திறக்க வேண்டுமென ஜனாதிபதி சொல்கிறார். இராணுவத் தளபதி வந்து சொல்கிறார் ஜனாதிபதி திறக்கச் சொன்னார் ஆகவே நாங்கள் திறக்கிறோம் என்று. தீர்மானிப்பது யார்? சுகாதார அமைச்சோ, தொற்று நோயியல் நிபுணர்களோ அல்ல. சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகமல்ல. ஜனாதிபதிதான் தீர்மானிக்கிறார்.

இப்போது பைத்தியக்காரகளின் வீட்டைப் போல இருக்கிறது. பொலிஸாரின் பொறுப்புதான் பிரண்டிக்ஸ் நிறுவனத்திற்கு வைரஸ் வந்தது எப்படி என்பதை பரிசோதித்து கண்டறிவது. போலிஸ் அதைச் செய்யாமல் கை கழுவிக்கொள்வது எப்படி, ஆவி பிடிப்பது எப்படி என்பதைப் பற்றி மக்களுக்கு போதிக்கிறார்கள். அதைச் செய்ய வேண்டியது மருத்துவர்கள். தொற்று நோயியல் நிறுவனம் வாய் மூடிக்கொண்டிருக்கும் போது தொற்று நோயை ஒழிப்பதைப் பற்றி இராணுவத் தளபதி வந்து பேசுகிறார். அரசியல்வாதிகள் மருந்தை சிபாரிசு செய்கிறார்கள். நோய் தொற்றியவர்களுக்கு செய்ய வேண்டிய பரிசோதனை என்னவென்பதை வியாபாரிகள் தீர்மானிக்கிறார்கள். பைத்தியக்காரர்களின் வீட்டைப் போல ஆகிவிட்டது.

இராணுவத் தளபதி ஊடகத்தின் முன்பாக வந்து நாங்கள் வெல்வோம் என்கிறார். யுத்தமொன்றின் போது அப்படி சொல்ல முடியும். யுத்தத்தில் படை வீரர்கள் மடிகிறார்கள். நாங்கள் வெல்வோம் என்று சொல்ல இராணுவத் தலைவர்களுக்கு முடியும். ஆனால் தொற்று நோயின் போது அப்படி முடியாது. உயிர்களை பாதுகாக்க வேண்டும்.

நாள்தோறும் பெருமளவு நோயாளர்கள் கண்டறியப்படும் போது ஊரடங்கை நீக்கிவிட்டு முடியுமானால் தப்பிப் பிழைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல அரசாங்கத்திற்கு முடியும். எந்தவித பொறிமுறையும்; இல்லை. ஆகவே, பொறிமுறையொன்றை தயாரிக்கவும், ஏனைய நாடுகளைப் போல பிணங்களை குவிக்க இடமளியாமல் மக்களின் உயிர்களை பாதுகாருங்கள் எனவும் அரசாங்கத்தை வற்புறுத்த வேண்டும். அதற்காக அனைவரோடும் சேர்ந்து சுகாதாரப் பிரிவுகள், தொழிற்சங்கங்கள் உட்பட அனைவரோடும் இணைந்து செயற்பட முன்னிலை சோஷலிஸக் கட்சி தயார்”. என்றார்.

பிந்திய செய்தி