நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மாவட்ட செயலாளர்களுடன், சென்னை பனையூரில் உள்ள இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் "அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்" என்ற பெயரில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

அவரது ரசிகர்கள் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று மதுரை, திருச்சி போன்ற இடங்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் சர்ச்சையை ஏற்படுத்தின.

விஜய் மேடைகளிலும் சினிமா சார்ந்து மட்டுமில்லாமல் அரசியலையும் சேர்த்து பேசுவார். இதனிடையே "அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்" என்ற பெயரில் விஜயின் தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் கட்சி பெயர் ஒன்றை தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார்.

இதை ஊடகங்கள் வாயிலாக அறிந்த விஜய் அந்த கட்சிக்கும் எனக்கும் எந்த தொடர்புமில்லை. அந்த கட்சி சார்பில் நடத்தப்படும் நிகழ்வுகளில் தனது பெயர் ஈடுபடுத்தப்படுமானால் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

இதுதொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த விஜயின் தாயாரான ஷோபா சந்திரசேகர் தனது அரசியல் பயணம் குறித்து பொதுவெளியில் பேச வேண்டாம் என விஜய் பலமுறை கூறியும் எஸ். ஏ. சந்திரசேகர் கேட்கவில்லை என தெரிவித்திருந்தார்.

இதனிடையே மதுரை, திருச்சி போன்ற மாவட்டங்களில் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றது. அந்த கூட்டங்களில் விஜய் என்ன முடிவு எடுக்கிறாரோ அதற்குத்தான் கட்டுப்படுவோம் என்றும் எஸ். ஏ. சந்திரசேகர் தொடங்கிய கட்சியில் இணையமாட்டோம் என்றும் விஜய் மக்கள் இயக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிந்திய செய்தி