நவம்பர் 16ஆம் தேதி முதல், 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்குப்  பாடசாலைகள் திறக்கப்படுமென அறிவித்திருந்த தமிழக அரசு அந்த அறிவிப்பை ரத்துசெய்துள்ளது. எனவே பாடசாலைகள் திறக்காமல் இருப்பதும் அது குறித்துத் தொடர்ந்து மாறுபட்ட அறிவிப்புகள் வருவதும் பல குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளன.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக இந்தக் கல்வியாண்டில் பாடசாலைகள் இதுவரை திறக்கப்படவில்லை. இந்த நிலையில், நவம்பர் 16ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை பாடசாலைகள் திறக்கப்படுமெனத் தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இதற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். வழக்குகளும் தொடரப்பட்டன.

இதையடுத்து பாடசாலைகளைத் திறப்பது குறித்துப் பெற்றோரிடம் கருத்துகளைக் கேட்கப்போவதாக மாநில அரசு அறிவித்தது. அதன்படி, இதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் நவம்பர் 9ஆம் தேதியன்று நடைபெற்றது.

இதில் சிலர் பாடசாலைகளைத் திறக்கலாம் என்றும் சிலர் திறக்க வேண்டாம் என்றும் மாறுபட்ட கருத்துகளை அளித்ததாக தற்போது தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஒன்பதாம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை பாடசாலைகளை நவம்பர் 16ஆம் தேதி முதல் திறக்கலாம் என்ற உத்தரவை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

இதேபோல கல்லூரிகளும் வரும் 16ஆம் தேதி முதல் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த உத்தரவு மாற்றப்பட்டு ஆராய்ச்சி மாணவர்கள், அறிவியல், தொழில்நுட்பம் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் டிசம்பர் 2ஆம் தேதி முதல் வகுப்புகள் நடைபெறுமென தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த மாணவர்களுக்கு மட்டும் விடுதிகள் திறக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் சிக்கல்களை கருத்தில் கொள்ளாமல், கல்வி நிலையங்களின் திறப்பு குறித்து வெளியிடப்படும் பல்வேறு அறிவிப்புகள் மாணவர்களிடத்தில் குழப்பத்தையே ஏற்படுத்தும் என்கிறார்கள் கல்வியாளர்கள்.

"பொங்கல் பண்டிகைக்கு பின்பு பாடசாலைகளை திறக்கலாம் என்பதை எங்கள் சங்கத்தின் சார்பில் அரசிடம் வலியுறுத்தினோம். இப்போது அரசே தனது முடிவை மாற்றி வெளியிடும் முன்பு, ஆசிரியர் சங்கங்களுடன் கலந்தாலோசித்து இருக்கலாம். பாடசாலைகளைத் திறப்பது குறித்து அடிக்கடி முடிவை மாற்றி அறிவிப்பதால் மாணவர்கள் மன ரீதியாக, குழப்பம் அடைவர்," என்கிறார் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தணிக்கையாளர் அருளானந்தம்.

பாடசாலைகளைத் திறக்க, பெற்றோரிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தியதே தவறான அணுகுமுறை என்கிறார் தமிழ்நாடு முதுநிலை ஆசிரியர் சங்க மாநில தலைவர் சுரேஷ்.

"பாடசாலைகளைத் திறக்க போதுமான வசதிகள் உள்ளதா என்பதை ஆய்வுசெய்ய கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் மருத்துவக் குழுக்களுடன் கலந்தாலோசித்து பின்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்க வேண்டும். பாடத் திட்டத்தை 50 சதவீதமாகக் குறைத்தால்தான் ஐந்து மாதங்களில் சிலபஸை முடித்து, பொதுத் தேர்தலை நடத்த இயலும். சுழற்சி முறையில், வகுப்புகள் நடத்துவதோடு, அனைத்து சுகாதார வசதிகளையும், பாடசாலைகளில் மேம்படுத்த வேண்டும்," என்கிறார் சுரேஷ்.

அரசுப் பள்ளி ஆசிரியர்களும் எதிர்க்கட்சிகளும் தரும் அழுத்தத்தால்தான் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படாமல் இருக்கிறது என்ற கருத்து தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு இருக்கிறது. மேலும், தனியார் பாடசாலைகள் இயங்காததால் அந்தப் பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலையும் இருக்கிறது.

"தனியார் பாடசாலைகளில் போதுமான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பெற்றோரும், பாடசாலைகளை திறக்க வேண்டுமென கருத்து தெரிவித்துள்ளனர். அரசு பாடசாலை ஆசிரியர்களும் எதிர்கட்சிகளும் தரும் அழுத்தத்தால் பாடசாலைகள் திறப்பதில் தடை நீடிக்கிறது. பள்ளிகள் துவங்காததால் தனியார் பள்ளி ஊழியர்கள், ஊதியம் இன்றி பெரிதும் சிரமப்படுகின்றனர்," எனச் சுட்டிக்காட்டுகிறார் தமிழ்நாடு மெட்ரிக் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பாடசாலைகள் சங்க மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார்.

மேலும், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு நடத்திய மாணவர் சேர்க்கைக்கு, கடந்த ஆண்டின் நிலுவைத் தொகையான, சுமார் 400 கோடி ரூபாயை அரசு உடனே தனியார் பாடசாலைகளுக்கு வழங்க வேண்டும். போதுமான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு கற்பித்தல் பணிகளை துவங்கினால் மட்டுமே பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், பாதிக்கப்படாமல் இருப்பர். பாடத் திட்டங்களை வெளியிடாததால் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதிலும் சிக்கல் நீடிக்கிறது என்கிறார் நந்தகுமார்.

தற்போதைய சூழலில் டிசம்பர் வரை பாடசாலைகள் திறப்பதற்கு வாய்ப்பில்லை என்று தெரிகிறது. அதற்கு பிறகு இந்தக் கல்வியாண்டில் வெறும் ஐந்து மாதங்களே எஞ்சியிருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறது என்பதை விரைவில் வெளிப்படுத்த வேண்டும் என்கிறார்கள் கல்வியாளர்கள்.

பிந்திய செய்தி