அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொத்துவில் பிரதேசத்தில் அண்மைக் காலமாக பொது மக்களின் காணிகளை அரசாங்கம் அவர்களுக்கு தெரியாமல் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளைக் கொண்டு அளந்து வருவதாக சட்டத்தரணியும் அம்பாறை மாவட்ட பொத்துவில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமாகிய முஷர்ரப் முதுனபீன் தெரிவித்தார்.

இது சம்பந்தமாக அவர்  theleader.lk கருத்து தெரிவிக்கையில்,

பொத்துவில் பிரதேசம் பல்லாண்டுகாலமாக பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் ஒரு பிரதேசமாகும் அதிலும் குறிப்பாக காணிப்பிரச்சினை உச்சக் கட்டத்தை எட்டியிருக்கின்றது.

கடந்த நவம்பர் 6 ம் திகதி பொத்துவில் ஆமவட்டுவான் பிரதேசத்தில் பொதுமக்களின் வயல் காணிகளை வனஜீவராசிகள்  திணைக்கள அதிகாரிகள் அளந்து எல்லைக் கட்டை இடுவதாக  எனக்கு தகவல் கிடைத்தது.குறித்த இடத்திற்கு கள விஜயம் செய்து பார்த்த போது வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் லகுகல எல்லையில் இருந்து பொத்துவில் எல்லைக்குள் உள்ள காணிகள் லகுகல வனப் பிரதேசத்திற்கு சொந்தமானது என்று கூறி அளந்து கொண்டிருந்தார்கள். அச்சந்தர்ப்பத்தில் 2006.07.20 அன்று வெளியிடப்பட்ட குறிப்பிட்ட காணி சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தலை காட்டினேன் அதில் குறிப்பிட்டுள்ளபடி 5131 ஹெக்டேர் அளவு கொண்ட காணியை அளப்பதில் எங்களுக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை ஆனால் அதை தாண்டி பொது மக்களின் காணிகளை அளப்பதை என்னால் அனுமதிக்க முடியாது என வந்திருந்த அதிகாரிகளுக்கு சுட்டிக் காட்டினேன்.

அதன் பின்னர் அந்த நடவடிக்கையை அவர்கள் இடை நிறுத்தினர்.இப்படி பொத்துவில் பிரதேசத்தில் பல இடங்களில் பொது மக்களின் காணிகளில் அ ரச தலையீடு அதிகரித்து காணப்படுகின்றது அதிலும் குறிப்பாக...

கிரான்கோவை, வட்டமடு ,பள்ளியடிவட்டை, செல்வவெளி, கிரான்கோமாரி, துக்வெல்ல, பாலந்திவட்டி, கோமாரி கனகர்கிராமம் போன்ற இன்னும் பல இடங்களில் பொது மக்களின் காணிகளில் அரச தலையீடு அதிகரித்துள்ளது.

இது சம்பந்தமான கலந்துரையாடல் (16.11.2020) இன்று பொத்துவில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி, மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற விருப்பதாக அவர் தெரிவித்தார்.

இப்படி பொது மக்களுக்கு பிரச்சினை வரும்போது அதில் நான் தலையீடு செய்வதால்  அரச காணிகளை அழிப்பதாகவும் பலவந்தமாக அரச காணிகளை பிடிப்பதாகவும் என்மேல் குற்றச் சாட்டு முன்வைக்கப்படுகின்றது. எங்களது தலைவர் (அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ) ரிசாட் பதியுதீன் அவர்கள் வில்பத்து காடுகளை அழித்ததாக அவர் மீது குற்றச் சாட்டுமுன் வைக்கப்பட்டது போல் தற்போது தன் மீதும் குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்

இப்படியான குற்றச் சாட்டுகளை என்மீது சுமத்துவதற்கு காரணம் நான் பசில் ராஜாபக்ச நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு இரட்டை குடியுரிமைக்கு ஆதரவாக வாக்களித்ததாகும்.என்மீது இந்தக் குற்றச் சாட்டை முன்வைப்பவர்கள் சஜித் அணியினராக இருக்கலாம் என்ற சந்தேகம் என்னுள் எழுகின்றது.

இந்த செய்தியை பல சிங்கள ஊடகங்கள் திரிபுபடுத்தி நான் இனவாத செயல்களில் ஈடுபடுவதாகவும் என்னிடம் நிறைய சொத்துக்கள் இருப்பதாகவும் பலகுற்றச் சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. உண்மையாக சொல்லப் போனால் எனது பெயரில் எவ்வித சொத்தும் இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் முதுனபீன் தெரிவித்தார்.

பொத்துவிலில் பல்லாண்டு காலமாக இருந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடம் இந்த ஆண்டு மக்கள் ஆணையுடன் வெற்றி அடைந்ததாகவும் இது உள்ளுர் அரசியலில் உள்ள சிலருக்கு மனக்கசப்பை ஏற்படுத்தி இருப்பதாக தன்னால் உணரக் கூடியதாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எது எப்படி இருந்த போதிலும் மக்களின் பிரச்சினைகளுக்காக நான் தொடர்ந்து மக்களுடன் இருப்பேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் முதுனபீன் தெரிவித்தார்.

பிந்திய செய்தி