1200 x 80 DMirror

 
 

வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்ய மத்திய அரசு முன்மொழிந்த வரைவு யோசனையை நிராகரித்துள்ள விவசாயிகள், வரும் 12ஆம் தேதி டெல்லி - ஜெய்பூர் நெடுஞ்சாலையை முடக்குவதாக அறிவித்துள்ளனர். இதற்கு முன்பாக வரும் 14ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகங்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று விவசாயிகள் சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பாக விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் டெல்லி சிங்கு பகுதியில் செய்தியாளர்களை புதன்கிழமை மாலையில் சந்தித்தனர். அப்போது ராஷ்ட்ரிய கிசான் மஸ்தூர் மகாசங்கத்தின் தலைவர் ஷிவகுமார் காக்கா, "டெல்லி எல்லையில் உள்ள விவசாயிகள், தலைநகருக்குள் நுழைந்து போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து விரைவில் முடிவெடுப்போம்" என்று கூறினார்.

அதற்கு முன்பாக வரும் 12ஆம் தேதி ஆக்ரா-டெல்லி எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலையை விவசாயிகள் முடக்குவார்கள். அன்றைய தினம் நாடு முழுவதும் உள்ள எந்த சுங்கச்சாவடியிலும் கட்டணம் செலுத்தாமல் செல்லும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபடுவார்கள் என்று அவர் தெரிவித்தார். இது மட்டுமின்றி வரும் 14ஆம் தேதி நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள பாஜக அலுவலகங்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்வோம் என்று ஷிவகுமார் காக்கா தெரிவித்தார்.

பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த தர்னா நடத்தப்படும் என்றும் எங்கெல்லாம் அதானி, அம்பானிக்கு சொந்தமான கார்பரேட் நிறுவனங்கள் உள்ளதோ அங்கெல்லாம் எங்களுடைய போராட்டங்களை நடத்துவோம் என்று விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் கூறினர்.

அரசு முன்மொழிவை நிராகரித்த விவசாயிகள்

வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்வது தொடர்பாக அரசு முன்மொழிந்த யோசனைகளை நிராகரிப்பதாக விவசாயிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை குறிப்பிட்ட சில விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து சுமார் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

அதன் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள், "விவசாயிகள் சட்டங்களை திரும்பப்பெற முடியாது என்ற எண்ணத்துடனேயே மத்திய அரசு இருக்கிறது. எனினும், அதில் திருத்தங்கள்செய்வது தொடர்பான முன்மொழிவை புதன்கிழமை தருகிறோம். அதன் பிறகு மீண்டும் பேசலாம் என்று கூறப்பட்டுள்ளது" என தெரிவித்தனர்.

இதன்படி மத்திய அரசின் யோசனைகள் அடங்கிய குறிப்பு விவசாயிகள் சங்க பிரதிநிதிகளிடம் புதன்கிழமை வழங்கப்பட்டது. அதை சிங்கு எல்லையில் போராடி வரும் தலைவர்களிடம் இந்திய வேளாண் துறை அதிகாரிகள் வழங்கினார்கள்.

20 பக்கங்கள் அடங்கிய அந்த குறிப்புரையில் விவசாயிகள் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களை களையும் வகையில் விளக்கம் தரப்பட்டு இறுதியாக எந்தெந்த திருத்தங்களுக்கு அரசு தயாராக உள்ளது என்பது தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.

இந்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் நடவடிக்கையில் பின்வாங்குவதற்கோ, சமரசத்துக்கோ இடமில்லை என்று டெல்லியில் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த பிறகு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.

"விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டங்கள் தொடர்பாக குடியரசு தலைவரிடம் 20 எதிர்க்கட்சிகள் சார்பில் மனு கொடுத்துள்ளதாகவும், வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்கு பாதிப்பாக இருப்பதால் அதை திரும்பப் பெற மத்திய அரசை கேட்டுக் கொள்ள வேண்டும் என குடியரசு தலைவரிடம் கேட்டுக் கொண்டோம்" என்று செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சிகள் குழுவில் இடம்பெற்ற மாநிலங்களை தி.மு.க உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "விவசாயிகளின் போராட்டங்கள் நியாயமான கோரிக்கைக்காக நடக்கிறது. இப்போது அவர்கள் பின்வாங்கினால் எப்போதுமே அவர்களின் உரிமைகளை மீட்டெடுக்க முடியாது. அவர்களுடன் நாங்கள் தொடர்ந்து துணையாக இருப்போம்," என்று தெரிவித்தார்.

கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக குடியரசு தலைவரை சந்திக்க ஐந்து பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குழுவில் இடம்பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி. ராஜாவும் உடனிருந்தனர்.

அதில் இடம்பெற்ற அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்திய விவசாயிகள் சங்க தலைவர்கள், அரசின் திட்டத்தை ஏற்க முடியாது என்று தெரிவித்தனர்.  "அரசின் திட்டத்தை விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் நிராகரித்து விட்டனர். விரைவில் ஊடகங்களிடம் அது குறித்து அவர்கள் விளக்குவார்கள்" என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், ஸ்வராஜ் கட்சி தலைவர் யோகேந்திர யாதவ், சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பாக அரசு சில முன்மொழியை வழங்கியது. ஆனால், அதை விவசாயிகள் தரப்பு ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறினார்.

இதற்கிடையே, விவசாயிகள் போராட்டங்கள் மற்றும் அவர்களின் கோரிக்கை தொடர்பாக டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், திமுக, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்டவற்றின் தலைவர்கள் புதன்கிழமை மாலையில் சந்தித்துப் பேசவுள்ளனர்.

மத்திய அரசின் முன்மொழிவை ஏற்க விவசாயிகள் நிராகரித்து விட்ட நிலையில் இந்த சந்திப்பு நடப்பதால், அது மத்திய அரசுக்கு மேலும் அழுத்தம் தரும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

இதேவேளை, டெல்லி உத்தர பிரதேசத்தை இணைக்கும் காஸிபூர் நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் திரண்டு வருகிறார்கள். மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் காணப்படாத நிலையில், அவர்கள் நகர எல்லையில் பெருமளவில் திரண்டு வருகிறார்கள். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் காவல்துறையினரும் மத்திய துணை ராணுவப்படையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்

nalan mendis

336 x 200 Sinhala

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி