1200 x 80 DMirror

 
 

கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஏறத்தாழ முழுக்க வெளியாகி விட்டன. அங்கு ஆளும் இடதுசாரிகள் அலை வீசி விட்டது. அந்த சூறாவளியில் சிக்கி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கூட்டணி வீசப்பட்டுள்ளது.

941 கிராம பஞ்சாயத்துகளில் 514, 6, மாநகராட்சிகளில் 5 மற்றும் 14 மாவட்ட பஞ்சாயத்துகளில் 11 இடங்களில் இடது ஜனநாயக முன்னணி அபாரமாக வெற்றி அல்லது முன்னிலை வகிக்கிறது என்பதை முதல்வர் பினராயி விஜயன் நேற்று உறுதி செய்தார்.

இதை மக்களின் வெற்றி என்று வர்ணித்தார் அவர். 108 பிளாக் பஞ்சாயத்துகளில் இடது முன்னணி, முன்னணியில் இருப்பதாகவும் பினராயி விஜயன் கூறினார். 

2016 இல் இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து கடினமான காலகட்டங்களில் ஒன்றைக் கடந்து வந்த இந்த நேரத்தில், மாபெரும் வெற்றி அதற்கு கிடைத்துள்ளது. 

வாக்கெடுப்பு முடிவை உற்று நோக்கினால் எல்.டி.எஃப் (கேரள காங்கிரஸ் -_மணி) மற்றும் லோகாந்த்ரிக் ஜனதா தளம் (கூட்டணி) கொவிட் -19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் இலவச ரேஷன் உள்ளிட்ட அதன் நலத் திட்டங்களுக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர் என்று சொல்ல முடியும். மத்திய அரசின் விசாரணை அமைப்புகள், இடதுசாரிகளை குறிவைத்து, நலத்திட்டங்களை முடக்க முயற்சிக்கிறது என்ற அதன் பிரசாரம் அனுதாப வாக்குகளை ஈர்க்க உதவியது என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

மற்றொரு விஷயமும் முக்கியமானது. பா.ஜ.கவுக்கு எதிரான சிறுபான்மை ஒருங்கிணைப்பும் அதற்கு பெரிய அளவில் உதவியுள்ளது. இந்துத்துவா அரசியலை பா.ஜ.க முன்னெடுத்ததால் இயல்பாகவே முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஓரணியில் திரண்டுள்ளனர். ஆளும் கூட்டணி பா.ஜ.கவுக்கு எதிராக சிறுபான்மையினரின் ஒருங்கிணைப்புக்காக பல இடங்களில் இரகசிய துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தது. காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்குப் போட்டு வாக்குகள் சிதறுவதை விட மொத்தமாக இடதுசாரிகளுக்கு வாக்குப் போடலாம் என்பது அவர்கள் முடிவாகியுள்ளது. எனவேதான், காங்கிரஸ் வலுவான இடங்களில் கூட இந்த முறை, இடதுசாரிகள் வென்றுள்ளனர்.

யுடிஎஃப்: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கடந்த ஆண்டு 20 லோக்சபா தொகுதிகளில் 19 இடங்களில் வென்றது. ஆனால், உள்ளாட்சி தேர்தலுக்கு மக்கள் மாறுபட்டு வாக்குப் போட்டு இடதுசாரிகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளனர். ஆறு மாநகராட்சிகளில் கண்ணூர் (வடக்கு கேரளா) மற்றும் கொச்சியில் மட்டுமே காங்கிரஸ் நல்ல உழைப்பை வெளிப்படுத்தியது.

திருவனந்தபுரம் மாநகராட்சியில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. 375 கிராம பஞ்சாயத்துகள், 44 பிளாக் பஞ்சாயத்துகள், 45 நகராட்சிகள் மற்றும் மூன்று மாவட்ட பஞ்சாயத்துகளில் முன்னணியில் உள்ளது யுடிஎஃப்.

பா.ஜ.க நிலைமை இந்த முறையும் பரிதாபமாகத்தான் இருக்கிறது. பா.ஜ.க எழுச்சியைக் கட்டுப்படுத்த யு.டி.எஃப் மற்றும் எல்.டி.எஃப் இணைந்து செயல்பட்டதாக கட்சியின் மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். பல வார்ட்டுகளில், அதிலும், திருவனந்தபுரத்தில் பா.ஜ.கவின் வெற்றி வாய்ப்புகளை நாசமாக்குவதற்காக காங்கிரஸ் தொண்டர்கள் தங்கள் வாக்குகளை சி.பி.ஐ (எம்)க்கு போட்டுள்ளனர்," என்று சுரேந்திரன் கூறினார், 

பா.ஜ.கவின் தோல்விக்கு அக்கட்சியின் உட்கட்சி பூசலும் ஒரு காரணம். ஷோபா சுரேந்திரன், பி எம் வேலயுதன், கே பி ஸ்ரீசன் போன்ற பல மூத்த தலைவர்கள் இந்த முறை பிரசாரத்திலிருந்து விலகியே இருந்தனர். கட்சியில் இரண்டு குழுக்கள் உள்ளன. ஒன்று வி.முரளீதரன் தலைமையிலானது, மற்றொன்று மூத்த தலைவர் பி.கே.கிருஷ்ணஸ்தாஸ் தலைமையிலானது. சுரேந்திரன் மாநிலத் தலைவராக பதவி உயர்த்தப்பட்ட பின்னர், பல தலைவர்கள் கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்கிறார்கள். ஆக சிறுபான்மை வாக்குகள் ஒரு பக்கமாக குவிந்ததும், பா.ஜ.க உட்கட்சி பூசலும் இடதுசாரிகளை மறுபடியும் அரியணையில் அமர்த்தி விட்டது.

nalan mendis

336 x 200 Sinhala

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி