ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவுக்கு பிரதமர் பதவியை வழங்கியதைப் போன்று கோத்தாபய ஜனாதிபதியான பின்னர்

 மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பிரதமர் பதவி வழங்கப்படும் என கோத்தாபய ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் டளஸ் அழகப்பெரும கூறியுள்ளார்.  எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும இதனைத் தெரிவித்தார்.

19வது அரசியலமைப்புத் திருத்தத்தினால் இடம்பெற்ற ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைப்பு தொடர்பான சவாலை வெற்றி கொள்ளும்  ஆற்றல் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு உள்ளது என்றும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும் இந்த உதாரணம் மிகவும் முக்கியம் வாய்ந்தது என சில சமூக ஊடக நிபுணர்கள் கூறுகின்றனர். 1994ம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுரங்க ஜனாதிபதியாக ஆகும் போது அப்போதிருந்த அரசியலமைப்பின் கீழ் பிரதமர் பதவி வெறுமனே பெயரளவிலான பதவியாக மாத்திரமே இருந்தது என்றும் அவர்கள் நினைவு படுத்துகின்றனர்.

ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சி காலத்தினுள் வயோதிப வயதில் இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அம்மையார் நடைமுறையி ரீதியில் எந்தவித அரச ஆட்சி நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாதததோடு அவருக்கு வெறுமனே கௌரவ பதவியாக மாத்திரமே பிரதமர் பதவி வழங்கப்பட்டிருந்தது.

அவ்வாறே கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகினால் மஹிந்த ராஜபக்ஷவை எந்தவித அதிகாரமும் கிடைக்கப்பெறாத ஒருவராக ஆக்குவதற்கான ஆயத்தங்கள் உள்ளதா என அந்த சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். டளஸ் அழகப்பெரும என்பவர் கோத்தாபயவின் உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளர் என்பதால் அவரது கருத்து கோத்தாபயவின் கருத்தா என அந்த சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

'எதிர்கால ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் இல்லை என்ற கதை பொய்யானது” - உதய கம்மன்பில

இதனிடையே எதிர்கல ஜனாதிபதிகு அதிகாரம் இருக்காது என்ற கதை பொய்யானது என நேற்று என். எம். பெரேரா நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பிவித்துரு ஹெல உருமயவின் தலைவர் சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்தார்.  19வது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ், “அடுத்த ஜனாதிபதி எதனையும் செய்ய முடியாத ஒருவராகும்” என்றும், அதிக அதிகாரங்கள் இருப்பது பிரதமருக்கே என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா ஸ்ரீ.ல.சு.கட்சி சம்மேளனத்தில் உரையாற்றும் போது கூறிய கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த உதய கம்மன்பில மேலும் கூறும் போது,

“எதிர்கால ஜனாதிபதி விலியம் கொபல்லாவவைப் போல பெயரளவிலான ஜனாதிபதி மாத்திரமே, அவருக்கு எந்தவித அதிகாரங்களும் இல்லை என கடந்த மூன்று மாதங்களாக ஊடகங்கள் ஊடாக பலரும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். ஜனாதிபதியால் எந்த ஒரு அமைச்சையும் வைத்துக் கொள்ள முடியாது என்றும் அவர்கள் கூறியிருந்தார்கள்.  நாம் அதனை அந்தளவுக்குப் பொருட்படுத்தவில்லை. எனினும் சில தினங்களுக்கு முன்பு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா அதே கருத்தைக் கூறியுள்ளார்.  எனவே இது தொடர்பில் உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.

ஜனாதிபதியால் தான் விரும்பும் அமைச்சுக்களை தம்வசம் வைத்துக் கொள்ள முடியும் என்றும், வேறு எந்த அமைச்சுக்கும் ஒப்படைக்கப்படாத விடயங்கள் மற்றும் நிறுவனங்கள் ஜனாதிபதிக்கு உரியது என்றும் அரசியலமைப்பின் 44ம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 19வது யாப்புத் திருத்தத்தில் அது நீக்கப்பட்டது. அதனை வைத்துத்தான் எதிர்கால ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் இல்லை என கூறப்படுகின்றது. உண்மையில் அது தவறானதாகும்.

அரசியலமைப்பின் 4(அ) ம் பிரிவை நாம் இப்போது பார்ப்போம். “நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட மக்களின் நிறைவேற்று அதிகாரங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட குடியரசின் ஜனாதிபதியினால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்”. இந்தப் பிரிவு மக்களின் இறையாண்மையுடன் நேரடியாகப் பிணைந்துள்ளதால் இதனை சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்கள் அங்கீகரித்தால் மாத்திரமே மாற்ற முடியும் என உச்ச நீதிமன்றம் பல சந்தர்ப்பங்களில் தீர்மானித்திருக்கின்றது.

இந்தப் பிரிவுக்கு அமைய மக்கள் தமது நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக ஒப்படைப்பது ஜனாதிபதியிடத்திலாகும். ஜனாதிபதியால் அதனை அமைச்சர்களுக்கு ஒப்படைக்க முடியும். யாருக்கும் ஒப்படைக்காவிட்டால் அந்த அதிகாரம் ஜனாதிபதியிடமே இருக்கும்.

எனவே ஜனாதிபதியினால் வேறொரு அமைச்சருக்கு ஒப்படைக்காத அனைத்து விடயங்களும் ஜனாதிபதிக்கு உரித்துடையதாகும். ஜனாதிபதிக்கு இந்த அதிகாரம் 4ம் பிரிவின் மூலமே கிடைத்திருக்கின்றது. 44ம் பிரிவில் கூறப்பட்டிருப்பது அதிகாரங்கள் விபரிக்கப்பட்டிருப்பது மாத்திரமேயாகும்.

19வது திருத்தத்தில் 44ம் பிரிவை மாற்றினாலும் 4ம் பிரிவில் கைவைக்கவில்லை. எனவே ஜனாதிபதியால் அமைச்சுப் பொறுப்புக்களை வைத்திருக்கும் வாய்ப்பு சிறிதளவேனும் மாற்றமடையவில்லை.

எதிர்கால ஜனாதிபதியால் பாதுகாப்பு அமைச்சைக் கூட வைத்திருக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா கட்சி மாநாட்டில் கூறியுள்ளார். யாரே அவரை ஏமாற்றியிருக்கின்றார்கள். 4ம் பிரிவின் ஒழுங்கு விதிகளினால் வேறு எந்த ஒரு அமைச்சருக்கும் பாதுகாப்பு அமைச்சை ஒப்படைக்க ஜனாதிபதியால் முடியாது. அவ்வாறு செய்தால் அது அரசியலமைப்பை மீறும் செயலாகும் என 2003ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கின்றது.

இதனால்தான் 2003ம் ஆண்டில் ஜனாதிபதி சந்திரிகா அப்போது திலக் மாரப்பனவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அமைச்சை மீண்டும் தன் பொறுப்பில் எடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டார். அந்த தீர்ப்பு இன்றும் நடைமுறையில் உள்ளது.

எனவே எதிர்கால ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சைக் கண்டிப்பாக தம் வசம் வைத்திருக்க வேண்டும். வேறு யாருக்கேனும் கொடுக்கப் போனால் அது அரசியலமைப்பை மீறும் செயலாக ஆகிவிடும். அது நம்பிக்கையில்லா பிரேரணையினைக் கொண்டு வருவதற்கு காரணமாக அமைந்துவிடும்” என்றார்.

பிந்திய செய்தி