அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையினை ஒழிப்பதற்கான பிரேரணையினைக் கொண்டு வந்தது ஜனாதிபதியா? அல்லது

பிரதமரா? என்ற விடயம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகின்றன.

“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையினை நீக்கும் பிரேரணை ரணில் மீது அதிருப்தியை ஏற்படுத்துவதற்காக சஜித் தரப்பினரால் ஜனாதிபதியுடன் இணைணந்து மேற்கொள்ளப்பட்ட சதியாக இருக்குமோ என சந்தேகம்” என பிரதமர் அலுவலகத்தினால் நிர்வகிக்கப்படுவதாகச் சொல்லப்படும் முகநூல் பக்கத்தில் பதியப்பட்ட பதிவினைத் தொடர்ந்தே இந்த கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகின்றன.

உண்மையில் பிரேரணையினை யார் கொண்டு வந்தது?

எவ்வாறாயினும் theleader.lk ஆராய்ந்த போது, நேற்று (19) மாலை 2.00 மணியளவில் அலரி மாளிகையில் ஐக்கிய தேசிய முன்னணி அமைச்சர்களின் கூட்டம் ஆரம்பித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையினை நீக்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் இந்தளவு அவசரமாக யாரின் தேவைக்காகக் கொண்டு வரப்பட்டது? என கேள்வி எழுப்பியுள்ளதோடு, அது ஜனாதிபதியின் தேவைக்காகச் செய்யப்பட்ட ஒன்று என பிரதமரும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற ஸ்ரீ.ல.சு.கட்சியின் மாநாட்டின் போது ஜனாதிபதி இதற்கான சிக்னல் ஒன்றை வழங்கியதை நினைவுபடுத்திய பிரதமர், இவ்வாறான யோசனைக்கு எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்ளமுடியும் என்றும், இதற்கமைய பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இந்த பிரேரணையினை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்றும் தெளிவு படுத்தியுள்ளார்.

ராஜபக்ஷக்களுடனான இரகசிய இணக்கப்பாடு இவ்வாறு வெளிப்படும் போது பிரதமர் மற்றும் அமைச்சர்கள் சிலருக்கிடையில் சூடான வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன. இதன்போது பிரதமருக்கு சார்பாக அமைச்சர்களான ராஜித சேனாரத்ன மற்றும் நவீன் திசாநாயக்கா ஆகிய இருவர் மாத்திரமே கருத்து தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம்  மேசை மீது பலமாகத் தட்டிபிரதமரை கடுமையாக விமர்சித்துள்ளதோடு, பிரதமர் மற்றும் அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருக்கிடையிலும் சூடான சொற்கள் பரிமாறப்பட்டன. பிரதமரின் மேசைக்கு அருகில் சென்ற அமைச்சர் திருமதி சந்திரானி பண்டார, “வெட்கம்..... வெட்டகம்” என பிரதமரின் முகத்திற்கே கூறியுள்ளார்.

அமைச்சாவைக் கூட்டத்தில் வெளியான விடயம்?

ஆரம்ப அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவின் தலைமையில் மாலை 3.00 மணியளவில் அமைச்சரவைக் கூட்டம் ஆரம்பமான போது கருத்து தெரிவித்த நிதி அமைச்சர் மங்கள சமரவீர, இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படுவது ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் அரசியல் ரீதியில் நல்லதல்ல எனக் கூறினார்.

“ஜனாதிபதி அவர்களே!, ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் இவ்வாறான பிரேரணையினை நீங்கள் சமர்ப்பிப்பது உங்களுக்கு தகுந்தது அல்ல என்பதே எமது நம்பிக்கையாகும். இது உங்களது பெயருக்கு நல்லதல்ல....” என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்த உடனேயே அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, இதற்கும் தனக்குத் தொடர்பில்லை என்றும், அமைச்சரவையினைக் கூட்டியது பிரதமர் கடந்த 18ம் திகதி இரவு செய்த அவசர வேண்டுகோளின் பிரகாரமே என்றும் தெரிவித்துள்ளார்.

கெபினட் அமைச்சர்கள் அனைவருமே பிரதமரை நோக்கி பார்த்த போது அவர் மௌனமாக இருந்துள்ளதோடு அனேகமான அமைச்சர்கள் பிரதமரை விமர்சித்து கருத்துக்களைத் தெரிவித்தனர்.  நீண்ட நேரமாக அமைச்சர்களின் சூடான கருத்துக்களை சிரித்த முகத்துடன் கேட்டுக் கொண்டிருந்த ஜனாதிபதி, “உங்களது பிரச்சினையினை நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள்.... இதில் என்னையும், ஸ்ரீ.ல.சு.கட்சியையும் சம்பந்தப்படுத்திக் கொள்ள வேண்டாம்...” எனக் கூறிவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டார்.

அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் ஜனாதிபதி செயலகத்திலிருந்து வெளியே வந்த அமைச்சர்கள் அதிகமானோர்  இவ்வாறான பிரேரணையினை இந்நேரத்தில் கொண்டு வந்தமை தொடர்பில் கடுமையாக விமர்சித்தார்கள்.  அவர்களுள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆக்ரோசமான முறையில் கருத்து தெரிவித்தார்.

பிந்திய செய்தி