ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தை கட்சியின் பிரதி தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச இன்று (26) பெற்றுக் கொண்டார்.
இன்று கட்சி தலைமையகமான சிரிகொத்தாவில் இடம்பெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவினால் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பெயரை பிரேரித்ததைத் தொடர்ந்து அதற்கு செயற்குழுவின் அங்கீகாரம் கிடைத்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் பேச்சாளரும் அமைச்சருமான ஹரீன் பொ்னாண்டோ பீபீசி சிங்கள சேவைக்குத் தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க 2005ம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டதன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் அங்கத்தவர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். 2010 மற்றும் 2015ம் ஆண்டுகளில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பொது வேட்பாளர்களுக்கு ஒத்துழைப்பை வழங்கியது.

தற்போதைய அரசின் வீடமைப்பு நிர்மாணத் துறை மற்றும் கலாசார அமைச்சரான சஜித் பிரேமதாச இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்தி