நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மொட்டு கட்சியின் வேட்பாளரான கோத்தாபய ராஜபக்ஷவின் முதலாவது பிரசாரக் கூட்டத்தின் போது

தான் ஜனாதிபதியாக தெரிவான பின்னர் சிறையில் இருக்கும் அனைத்து இராணுவ வீரர்களையும் அன்றைய தினமே விடுதலை செய்வதாகக் கூறியிருந்தார்.

இந்த இராணுவ வீரர்கள் போலியான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்பதே மொட்டுக் கட்சியின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் வாதமாகும்.தடுப்புக்காவலில் இருக்கும் இந்த படைவீரர்களைப் பற்றி கோத்தாபய கூறாத விடயம் இதுதான்,

பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 42 படையினருள் தற்போது ஏழு பேரே இன்னமும் விளக்கமறியலில் உள்ளதோடு, ஏனைய அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனா். மேலும் அவர்களுள் தமது கடமைகளின் போது இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒருவரும் இல்லை.

தற்போது சந்தேகத்தின் பேரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருப்பது ஊடகவியலாளர்கள் படுகொலை, ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை, ஊடகவியலாளர்களைக் கடத்திச் சென்றமை மற்றும் கப்பம் பெறுவதற்காக இளைஞர்களைக் கடத்திச் சென்றமை போன்ற குற்றச்சாட்டுக்களிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறான குற்றச் செயல்களில் தொடர்புபடுவது படைவீரர்களின் கடமை அல்ல என்பதோடு, அவை முற்றாகவே அரசியல் தேவை அல்லது உத்தரவுகளின் பிரகாரம் இடம்பெற்ற குற்றச் செயல்கள் என்து தெளிவானது.

இந்நிலையில் கோத்தாபய ராஜபக்ஷ, தான் நவம்பர் 17ம் திகதி இவ்வாறு கைது செய்யப்பட்டிருக்கும் அனைத்து படையினரையும் விடுதலை செய்வதாக உறுதியளித்துள்ளார்.  ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரங்களின் பிரகாரம் நீதிமன்ற செயற்பாடுகளினால் குற்றவாளியாகக் காணப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட பின்னரே அவ்வாறானவர்களுக்கு ஜனாதிபதியால் மன்னிப்பு வழங்க முடியும். அவ்வாறில்லாமல் விசாரணைகள் இடம்பெற்று வரும் வழக்குகளுடன் தொடர்புடைய நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் சந்தேக நபர்களை விடுதலை செய்வதற்கான எந்த அதிகாரங்களும் ஜனாதிபதிக்கு இல்லை.

பிந்திய செய்தி