ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும்

அறிந்து கொண்டிருந்ததாக சமாதானம் மற்றும் சமூக மையத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் உச்சநீதிமன்ற சட்டத்தரணி பங்குத்தந்தை அசோக் ஸ்டீபன் கூறினார்.

“சுருங்கக் கூறினால் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் நடக்கவிருப்பதை அறிந்திருந்தார். இப்போது இவர்கள் ஒன்று சேர்ந்து கொண்டு எமது கத்தோலிக சபையின் வாக்குகளை இலக்கு வைத்து மேற்கொள்ளும் செயற்பாடுகள் தொடர்பில் நாம் கவலையடைகின்றோம் என்பதை பகிரங்கமாகவே கூற வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

“தான் ஜனாதிபதியாக வெற்றி பெற்றால் இந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக சுயாதீன ஆணைக்குழு ஒன்றை நியமிப்பதாக எமது கார்டினலிடம் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது கூறியிருக்கின்றார். அது நல்லதொரு விடயம்.

அப்படியாயின் அவர்களது அரசாங்க காலத்தில் மண்ணெண்ணெய் விலை அதிகரிப்புக்கு எதிராக சிலாபத்தில் ஆர்ப்பாட்டம் செய்த எமது எண்டன் பெர்னாண்டோ துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார், கட்டுநாயக்காவில் ரொஷேன் சானக படுகொலை செய்யப்பட்டார், ரத்துபஸ்வெலவில் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள், லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டார். எனவே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்காகவும் சுயாதீன ஆணைக்குழுவை நியமித்து கொலை செய்யப்பட்ட குடும்பங்களுக்கு நியாயத்தை  வழங்குங்கள் என கோட்டாபய ராஜபக்ஷவிடம் கூற வேண்டும்.

இவர்கள் அனைவரும் ஒன்றே! இவர்கள் இந்த தற்கொலை குண்டு தாக்குதலை ஏற்கனவே அறிந்திருந்தார்கள். எனவே  இந்த தாக்குலை மார்க்கட் செய்து வாக்கு கேட்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்” என்றார்.

பிந்திய செய்தி